‘வலிமை’ : திரை விமர்சனம்!

அஜித்குமார் மதுரையில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் சிறந்த போலீஸ் அதிகாரி. குற்றவாளிகளை தண்டிப்பதை விட அவர்களை நல்வழிப்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டவர், கண்டிப்பானவர். சென்னையில் நடக்கும் குற்றச்செயல்களை கண்டுபிடிக்க அவர் மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார். அவரது விறுவிறுப்பான விசாரணையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகிறது. குற்றவாளிகளை  அஜித்குமார் எப்படி கண்டுபிடித்தார். அவர்களை என்ன செய்தார்? என்பதை இயக்குனர் வினோத் விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரைக்கதையில், வலுக்கட்டாயமான, குடும்ப பின்னணியை சேர்த்து (அஜித்குமார்) ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

அஜித்குமார் அழகான, கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வந்து ரசிகர்களை ஈர்க்கிறார். சண்டைகாட்சிகளிலும், பைக் ரேஸ்காட்சிகளிலும் கூடுதலாக ரசிகர்களை பரவசப்படுத்துகிறார். இவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களின் விசில் சத்தம் காதை பிளக்கிறது. அவரின்  காதலியாகவும், காவல்துறை அதிகாரியாகவும் நடித்திருக்கும் ஹூமா குரேஷி அளவான நடிப்பு ஆக்‌ஷன் காட்சிகளில் இவருக்கும் விசில் பறக்கிறது.

RX 100 தெலுங்கு படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்து இருக்கிறார், என்பதை விட மிரட்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

70-80 களில் கதாநாயகியாக நடித்த சுமித்ரா, அஜித்குமாரின் அம்மாவாக நடித்து இருக்கிறார். அச்யுத் குமார், ராஜ் ஐய்யப்பா, ஜி.எம்.சுந்தர் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, பைக் ஸ்டண்ட் சேசிங்க் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் வாய் பிளந்து பார்க்கும் படி படம்பிடித்துள்ளார். இவரின் ஒளிப்பதிவு  படத்திற்கு மிகப்பெரிய பலம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை அமைத்து இருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் விறுவிறுப்பு இறுதி வரை இல்லை! அம்மா சென்டிமென்ட் காட்சிகளால் ரசிகர்கள் சற்று நெளிகிறார்கள். இருந்தாலும் இயக்குநர் எச்.வினோத், அஜித்துக்கான மாஸான காட்சிகளை வைத்து ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறார்.

படத்தில் இடம்பெறும் பைக் சேசிங் உள்ளிட்ட ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக இருப்பதோடு, பிரமிக்க வைக்கிறது. ‘வலிமை’ அஜித்குமார் ரசிகர்களுக்கான படம்!

மொத்தத்தில், நல்ல இயக்குனராக பரிமளித்த எச்.வினோத், அஜித்குமாரின் புகழ் என்ற ஆலமர நிழலில் ஓய்வு எடுத்து இருக்கிறார்.