வாஸ்கோடகாமா ஒரு ஸ்பூஃப் வகையிலான படம். வாஸ்கோடகாமா படத்தின் பெயரே, திரை ரசிகர்களிடம் அப்படத்தினை பார்க்கும் ஆவலைத் தூண்டியது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே, வாஸ்கோடகாமா அவர்களை மகிழ்வித்ததா, இல்லையா? பார்க்கலாம்.
மனிதாபிமானம் அருகிவரும் இன்றைய சூழலில், எதிர்காலம் எப்படி பட்டதாக இருக்கும். எனும் கற்பனையின் வடிவமே வாஸ்கோடகாமா படம். அதாவது பொய், பித்தலாட்டம், தீய செயல்கள் செய்பவர்கள் நல்லவர்களாகவும், நல்ல செயல்களில் ஈடுபடுபவர்கள் தீயவர்களாகவும் கருதப்படுகின்றனர். குறிப்பாக நல்லவர்களுக்கு பெண் கொடுக்கமாட்டார்கள். இப்படி தொடர்ந்து நல்லது செய்து வருபவர்களை, ‘வாஸ்கோடகாமா’ என்ற சிறையில் அடைத்து விடுகின்றனர். இப்படிப்பட்ட சமுதாயத்தில் தொடர்ந்து நல்லது செய்யும் நாயகன் நகுல், நல்லவனாக நடிக்கும் வம்சி கிருஷ்ணா இருவரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அப்போது சிறைக்குள் இருக்கும் கே எஸ் ரவிக்குமாரை, வம்சி கிருஷ்ணா கொலை செய்ய முயற்சிக்கின்றார். அதை நகுல் தடுக்க முயற்சிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் வாஸ்கோடகாமா படத்தின் கதை.
அறிமுக இயக்குநர் ஆர்.ஜி.கே, ஏன் இந்தக்கதையை தேர்ந்தெடுத்தார் என்பது புரியவில்லை. சொல்ல வந்த கதையை, குழப்பமான திரைக்கதையின் மூலம் சொல்லி ரசிகர்களை வதைத்து எடுக்கிறார்.
இந்தப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர முயற்சித்த நகுலுக்கு இது போதாத காலம். நடிப்பினை பொறுத்தவரை, நாயகனாக நடித்திருக்கும் நகுல், நாயகியாக நடித்திருக்கும் அர்த்தனா பினு, வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணா மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், பிரேம்குமார், படவா கோபி, சேசு உள்ளிட்ட அனைவரும் இயக்குநர் ஆர்.ஜி.கே, வின் விருப்பப்படி நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் என்.வி.அருணின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
வித்தியாசமான கதையை உருவாக்கிய இயக்குநர் ஆர்.ஜி.கே, அதை சுவாரஷ்யமாக திரைக்கதை படுத்துவதில் தவறிவிட்டார். அதுவே படத்தின் பெரும்பலவீனமாக ஆகிவிட்டது.
மொத்தத்தில், இயக்குநர் ஆர் ஜி கே ‘வாஸ்கோடகாமா’ ஏமாற்றம்!