நண்பர்களான காயத்ரி ஷங்கர், ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் ஆகிய ஐந்து பேரும், மலைப்பாங்கான வனப்பகுதிக்குள் ஒரு ஜாலியான அட்வெஞ்சர் ட்ரிப் செல்கின்றனர். எப்போதும் போல் ரெகுலரான வழியில் செல்வதை தவிர்த்து, யாருமே செல்லாத புதிய பகுதிக்குள் செல்ல முடிவெடுக்கின்றனர். இதற்காக அந்த மலையில் வசிக்கும் பால சரவணனை வழிகாட்டியாக அழைத்து செல்கின்றனர். அவர்கள்செல்லும் வழியில், ஒரு தடை செய்யப்பட்ட பகுதியினை பார்க்கின்றனர். நண்பர்களில் சிலர் அந்த பகுதிக்குள் செல்ல முடிவெடுக்க அதை தடுக்கிறார், பால சரவணன். அதையும் மீறி அந்த பகுதிக்குள் நுழைகின்றனர். நண்பர்களில் சிலர் காணாமல் போகின்றனர். மற்றவர்கள் அவர்களை தேடிச்செல்கின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது என்பதே, திகிலூட்டும் ‘பேச்சி’யின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
படம் தொடங்கிய சில காட்சிகளிலேயே திகிலூட்டி விடுகின்றனர். பகலில் நடக்கும் கதை என்றாலும் திகிலுக்கு பஞ்சமில்லை. படத்தில் நடித்த நடிகர்கள் காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா மற்றும் மகேஷ் என அனைவருமே சிறப்பாக நடித்து ரசிகர்களை பயமுறுத்தியிருக்கிறார்கள்.
காமெடி வேடங்களில் நடித்து வந்த பால சரவணன், இந்தப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். மொத்தப் படத்தினையும் விறுவிறுப்பாக கொண்டு செல்ல இவரது கதாபாத்திரம் உதவியிருக்கிறது. காட்டில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்ற போராடும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். காவல் தெய்வமான வன தேவதை பேச்சியை, பேயாக சித்தரித்தது ஏன் எனத் தெரியவில்லை.
ஒளிப்பதிவாளர் பார்த்திபனின் ஒளிப்பதிவு, காடுகளிடையே ஊடுருவி, ஒருவிதமான பயத்தினை ரசிகர்களிடம் ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவு கோணங்கள் சிறப்பு.
வழக்கமான திகில் படங்களுக்கு ஏற்றவாறு இசையமைத்திருக்கிறார், இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன்.
எழுதி இயக்கியிருக்கும் ராமச்சந்திரன், ரசிகர்களின் பல்ஸ் அறிந்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ஒரு சில படங்களின் சாயல் இருந்தாலும் பரவாயில்லை!
மொத்தத்தில், இந்த ‘பேச்சி’ யை ஒரு முறை பார்க்கலாம்!