வீட்ல விசேஷம் –  விமர்சனம்

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் பாணியிலான சற்று  வித்தியாசமான, விவகாரமான குடும்ப கதையை எழுதி, இயக்கி, நடித்தியிருக்கிறார் ஆர். ஜே. பாலாஜி. ஏற்கனவே  ‘எல். கே. ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ என இரண்டு  சுமாரான கமர்ஷியல் ஹிட்களை கொடுத்துள்ளவர். அந்த வகையில் வீட்ல விசேஷம் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. அந்த எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்திருக்கிறாரா? பார்க்கலாம்.

ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வுபெறும் வயதில் உள்ளவர்  சத்யராஜ். இவரது மனைவி ஊர்வசி. இவர்களுக்கு ஆசிரியராக பணியாற்றும் மூத்த மகனாக ஆர் ஜே பாலாஜி, பிளஸ் 2 படிக்கும் இளைய மகனாக விஷ்வேஷ் என இரண்டு ஆண் பிள்ளைகள். இவர்களுடன் சத்யராஜின் அம்மா ‘கே ஏ பி சி’  லலிதா என ஐந்து பேர் கொண்ட அழகான குடும்பம்.

இந்தக் குடும்பத்தில் ஆறாவதாக வாரிசு ஒன்று உருவாகிறது அதாவது ஊர்வசி மூன்றாவது முறையாக தாயாகிறார். சத்யராஜுக்கு உள்ளூர  மகிழ்ச்சி. ஆனால் இதனை சமூகம் அவமானமாக பார்க்கிறது. அபர்ணா பாலமுரளியை காதலித்து திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்து கொண்டிருக்கும் ஆர்ஜே பாலாஜிக்கு, இந்த விசயம் எந்த மாதிரியான நெருக்கடியை கொடுக்கிறது என்பதும், பள்ளிக்கூடத்துக்கு செல்லும் இளைய மகனுக்கு தன் அம்மா கருவுற்றிருப்பது எப்படி உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும், இதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதையும் தன் பாணியில் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர் ஜே பாலாஜி மற்றும் என் ஜே ராமஜெயம்.

ஹிந்தியில் வெளியான ‘பதாய் ஹோ’ எனும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்றாலும், சில இடங்களில் ரசனையான காட்சியை உருவாக்கி பார்வையாளர்களை சந்தோஷப்படுத்துகிறார் இயக்குனரான ஆர் ஜே பாலாஜி மற்றும் என் ஜே ராமஜெயம்.

கிரிஷ் கங்காதரனின் இசையும், கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

முட்டம் சின்னப்பதாஸ், அமாவாசை, கட்டப்பா என எத்தனையோ கதாபாத்திரங்களை ஏற்று தன் திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வசீகரித்த சத்யராஜ், இந்தப்படத்தில் தன்னுடைய அனுபவத்துடன் கூடிய பக்குவமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்கிறார். அவருக்கு இணையாக ஊர்வசியும் அமர்கிறார். உச்சகட்ட காட்சியில் சத்யராஜை பார்த்து ‘டேய் ஆம்பள தடியா..’ என விளித்து பேசுவது ரசனை.

ஆர் ஜே பாலாஜி நாயகன் என்றாலும், பெரும்பாலான காட்சிகளை சத்யராஜுக்கு அமைத்து கொடுத்து படத்தை வெற்றி பெறச் செய்திருக்கிறார், ஒரு இயக்குனராக. சர்ச்சையான கருத்துள்ள படமாக இருந்தாலும் அதனை நாசூக்கான திரைக்கதை மூலமாக கலகலப்பான முறையில் கொண்டு சென்றது படத்திற்கு பலம்.

மொத்தத்தில் வீட்ல விசேஷம் தம்பதிகள் சகிதமாக பார்த்து ரசிக்கலாம்.