பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ போஸ்டர்!
தென் மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர், நடிகர் விஜய் சேதுபதி. அதன் பிறகு அடுத்தடுத்து வெளியான பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களின் மூலம் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும், தன் பக்கம் இழுத்துக் கொண்டார். சிறிய கால இடைவெளியிலேயே, ஆரஞ்சு மிட்டாய், சீத்க்காதி, சூப்பர் டீலக்ஸ் போன்ற பலதரப்பட்ட, வித்தியாசமான படங்களின் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்று வருகிறார். அதோடு இந்தியாவின் புகழ் பெற்ற நடிகர்களான ஷாருக்கான், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோருடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் 50 வது படமாக உருவாகியுள்ள மகாராஜா படத்தின் போஸ்டர், பத்திரிகையாளர்கள் தேவராஜ், அனுபமா, ஜெயச்சந்திரன், ஒற்றன் துரை, ஸ்ரீதர் பிள்ளை ஆகியோரால் வெளியிடப்பட்டது.
மகாராஜா படத்தினை, கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘குரங்கு பொம்மை’ என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் பிரபலமான, இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்க, வில்லனாக, பிரபல பாலிவுட் இயக்குனர், நடிகர் அனுராக் காஷ்யப் நடித்திருக்கிறார். இவர்களுடன், ஒளிப்பதிவாளர் நடராஜ், நடிகைகள் அபிராமி, மம்தா மோகன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முடி திருத்தும் தொழிலாளராக நடித்துள்ள விஜய் சேதுபதி, தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்திற்காக பழிவாங்க புறப்படுவதே மகாராஜா படத்தின் கதை!