கட்டா குஸ்தி 3 ரெடி!” – 50-வது நாள் வெற்றி விழாவில் அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்து பாக்ஸ் ஆபீஸில் அரை சதமடித்துள்ளது. இந்த அசுர சாதனையை விமரிசையாகக் கொண்டாடும் வகையில் சென்னையில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு விழாவில் நடனப் புயல் பிரபுதேவா, மூத்த நடிகை ரம்யா கிருஷ்ணன், அமைச்சர் ராஜ்மோகன், கதாநாயகிகள் ஐஸ்வர்யா லட்சுமி, மோக்ஷா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். விழாவில் படத்தின் வெற்றிக்காக உழைத்த கலைஞர்களுக்கு ஷீல்டுகள் மற்றும் பதக்கங்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.

விழாவில் பேசிய இயக்குநர் செல்லா அய்யாவு,

தற்போதைய டிஜிட்டல் திரையரங்கு சூழலில் ஒரு படம் 50 நாட்களைக் கடந்து ஓடுவது மிகப்பெரிய சாதனை என்று கூறி, தனது உதவி இயக்குநர் காலத்தில் வாங்கிய முதல் பரிசுக்கு அருகில் இந்த 50-வது நாள் சீல்டை வைக்கப் போவதாக நெகிழ்ந்தார்.

தொடர்ந்து பேசிய நடிகர் விஷ்ணு விஷால்,

தற்போதைய சினிமா சூழலில் வெற்றி என்பது மிகவும் அரிதான ஒன்று என்பதால், அதனை முழுமையாகக் கொண்டாட வேண்டும் என்ற தனது எண்ணத்திற்குத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முழு ஆதரவு தந்ததாகக் கூறினார். மேலும், மேடையில் இருந்த பிரபுதேவா தனது சிறுவயது இன்ஸ்பிரேஷன் என்றும், அவரது ‘சிக்கு புக்கு’ பாடலுக்கு நடனமாடி தான் பல போட்டிகளில் வென்றுள்ளதாகவும் fanboy தருணத்தைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன், ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள இந்தத் தொடரின் அடுத்த பிரம்மாண்ட பாகமான ‘கட்டா குஸ்தி 3’ திரைப்படமும் விரைவில் உருவாகும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்குப் பெரும் இன்ப அதிர்ச்சி அளித்தார்.

மேடையில் பேசிய மூத்த நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரபுதேவா ஆகியோர்,

இக்காலகட்டத்தில் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து அதைச் சூப்பர் ஹிட்டாக்குவது மிகப்பெரிய சவால் என்றும், அந்த சவாலை இயக்குநர் செல்லா சிறப்பாகச் செய்துள்ளார் என்றும் பாராட்டினர். விஷ்ணு விஷால் தனது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் 200 சதவீத அசாத்திய உழைப்பைத் தருபவர் என்று பிரபுதேவா புகழாரம் சூட்டினார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில்,

ஒரு நாளில் ஐந்து காட்சிகள் ஓடுவதே சவாலான சூழ்நிலையில் 50 நாட்கள் என்பது படக்குழுவுக்குக் கிடைத்த பெரிய மணிமகுடம் என்றார்.

கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி தனக்கு வாழ்நாள் அடையாளமாக மாறிய கீர்த்தி கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளராக மிரட்டிய விஷ்ணு விஷாலுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஓடிடி ரிலீஸிற்குப் பிறகு பிற மொழி ரசிகர்கள் கூடத் தன்னை ‘மீனாட்சி’ என்றே அழைப்பதாக நடிகை மோக்ஷா வியப்பு தெரிவித்தார்.

இறுதியாகப் பேசிய யோகி பாபு,

படத்தின் இறுதியில் ‘கட்டா குஸ்தி 3’ உருவாவதற்கான ஒரு முக்கியப் புள்ளியை வசனமாக வைத்தது இயக்குநர் செல்லா சாரின் மாஸ்டர் பிளான் தான் என்று கூறி க்ளைமாக்ஸ் ரகசியத்தை உடைத்தார். சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்சேனா இணை தயாரிப்பில் உருவான இப்படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம் தமிழ் சினிமாவில் ஒரு மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாக நிறைவடைந்தது.