நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் நடந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது..
அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் நடைபெற்றுள்ள வரலாறு காணாத நிலக்கரி இறக்குமதி ஊழல் பேரதிர்ச்சியடைய வைக்கிறது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சி.ஏ.ஜி. அறிக்கை திரை மறைவில் நடைபெற்ற நிலக்கரி ஊழலின் முகமூடியை கிழித்திருக்கிறது.
அக்டோபர் 2012 முதல் பிப்ரவரி 2016 வரை தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் 1599.81 கோடி ரூபாய் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை சி.ஏ.ஜி அறிக்கை புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டு அது சட்டப்பேரவையிலும் வைக்கப்பட்டு விட்டது.
“ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்ட நாளில் உள்ள விலைக்குப் பதிலாக நிலக்கரியை இறக்குமதி செய்யும் நாளில் இருந்த விலையை மின் பகிர்மானக்கழகம் கொடுத்தது”, “தரமில்லாத நிலக்கரியை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்தது”, “சர்வதேச அளவில் நிலக்கரி விலை குறைந்து கொண்டிருந்த நேரத்தில் அதிக விலை நிர்ணயித்து டெண்டர் போடுங்கள் என்று மின் பகிர்மானக் கழகமே வலியுறுத்தியது”, “இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரத்தை பரிசோதனை செய்ய மின்பகிர்மானக்கழகம் நியமித்த ஏஜென்ஸி நிலக்கரியின் தரம் பெரிய அளவில் குறைந்து விடவில்லை என்று சான்றிதழ் வழங்கியது” என்று மிக மோசமான முறைகேடுகள் மூலம் தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் மட்டும் 1559.81 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதை ஆணித்தரமான ஆதாரங்களுடன் சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.
இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், அக்டோபர் 2012 முதல் பிப்ரவரி 2016 வரை சர்வதேச சந்தையில் ஒரு மெட்ரிக் டன்னின் விலை 92.06 டாலரிலிருந்து 61 டாலராக குறைந்திருக்கிறது. இந்த விலைக்குறைப்புக்கு ஏற்றவாறு நிலக்கரியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்கழகம் இறக்குமதி செய்யாமல், அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்திருப்பது அரசு ஆவணங்களின் மூலம் உறுதியாகியிருக்கிறது.
ஒப்பந்தப்படி இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி 6000 மொத்த கலோரிபிஃக் மதிப்பு உள்ளதாக இருக்க வேண்டும். அப்படி இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் தரத்தை உறுதி செய்ய மின்பகிர்மானக் கழகமே ஒரு ஏஜென்ஸியை நியமித்திருக்கிறது.
ஆனால், அந்த ஏஜென்ஸியோ “நிலக்கரியின் தரம் ஒரு சதவீதம் மட்டுமே குறைவாக இருக்கிறது” என்று அறிக்கை கொடுத்திருக்கிறது. ஆனால், நிலக்கரியின் தரம் குறித்து பரிசோதிக்க சி.ஏ.ஜி நடத்திய ஆய்வில் ஒப்பந்தப்படியான 6000 மொத்த கலோரிபிஃக் மதிப்பிலிருந்து 3.3 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தரம் குறைவான நிலக்கரி இறக்குமதி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மட்டும் 607.48 கோடி ரூபாய் மின் பகிர்மானக்கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே 2012 முதல் 2016 வரை தரமற்ற நிலக்கரியை, அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்தது மட்டுமின்றி, ஒரு ஏஜென்ஸியை நியமித்து தரமற்ற நிலக்கரியை தரமுள்ளதாக சான்றிதழ் கொடுக்க வைத்து மிகப்பெரும் ஊழல் சதி அரங்கேறியிருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
ஏற்கனவே, மத்திய அரசின் வருவாய் புலனாய்வு துறை அறிக்கையில், “இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் இந்தோனேஷிய நிலக்கரி அந்நாட்டின் துறைமுகங்களில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டாலும், சிங்கப்பூர், துபாய், ஹாங்காங் பிரிட்டிஷ் தீவுகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாக அந்நாட்டில் உள்ள இடைத்தரகர்கள் மூலம் இன்வாய்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்தோனேஷியாவில் உள்ள நிலக்கரி விலையை விட இந்த இடைத் தரகர்கள் நிர்ணயித்த விலை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகம் இருக்கிறது. இந்தோனேஷியாவில் நிலக்கரி இறக்குமதி செய்யும் போது அங்குள்ள கம்பெனி ஒரிஜினல் இன்வாய்ஸுடன் சேர்த்து மூன்று நகல் கொடுப்பது வழக்கம். இவற்றில் ஒரிஜினல் இன்வாய்ஸ் கட்டாயமாக இந்திய கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும்.
ஆனால், இந்த தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் ஒரிஜினல் இன்வாய்ஸ் கொடுப்பதற்கு பதிலாக அவற்றின் ஜெராக்ஸ் காப்பிகள் மட்டுமே கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி இறக்குமதி செய்துள்ள 40 முன்னணி இறக்குமதியாளர்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்று அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன.
மத்திய வருவாய் புலானாய்வுத்துறை அறிக்கை மற்றும் 2016-17 ஆம் ஆண்டிற்கான சி.ஏ.ஜி. அறிக்கை இரண்டும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் 2012 முதல் 2016 வரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள 12 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி மெகா ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறது.
அப்பாவி மக்களின் தலையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு மின் கட்டண உயர்வு என்ற பாறாங்கல்லை தூக்கி வைத்த அ.தி.மு.க அரசு, இப்படி தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து “ஊழல் கொள்ளை” செய்திருப்பதன் மூலம், எந்த அளவிற்கு ஊழல் பெருவெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த ஊழல் முறைகேட்டில் அப்போதைய மின் வாரியத்தலைவர் திரு ஞானதேசிகன், மின்துறை அமைச்சராக இருந்த திரு நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும், பிறகு மின்துறை அமைச்சராக பொறுப்பேற்று இந்த ஊழலை மூடி மறைத்து வரும் அமைச்சர் பி.தங்கமணியும் “கூட்டுச் சதி”க்கு பொறுப்பாகிறார்கள். இது தவிர “நிலக்கரி இறக்குமதி” விவகாரத்தில் அதானி குழுமத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆகவே, சர்வதேச சந்தையில் நிலவிய நிலக்கரியின் குறைந்த விலையை அதிக விலையாக காட்டி, குறைந்த தரமுள்ள நிலக்கரியை அதிக தரமுள்ள நிலக்கரியாக சித்தரித்து, அதற்கு ஏற்றார்போல் அரசு ஆவணங்களை மாற்றி, ஒப்பந்த விதிகளை ஒட்டுமொத்தமாக மீறி 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் நடைபெற்றுள்ள இந்த மெகா ஊழல் குறித்து சி.ஏ.ஜி. மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி வழங்க மறுத்தால், நிலக்கரி ஊழல் பற்றி விசாரிக்க திராவிட முன்னேற்றக் கழகமே நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு தன்னுடைய அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.