கடிகார முள் சரியாக இரவு 11.30-ஐத் தொடும்போது, சாலையில் நிகழும் ஒரு சிறிய நிகழ்வு பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டால் என்னவாகும்? இந்த ஒற்றைக் கேள்வியை மையமாக வைத்து, ஒரு பரபரப்பான உளவியல் திரில்லர் அனுபவத்தைத் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் மலர்விழி நடேசன். அலர் ஸ்டுடியோஸ் சார்பில் அவரே ஷிவானி சுப்பிரமணியுடன் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம், ஆரம்பம் முதலே ஒருவித மர்ம முடிச்சுடன் நகர்கிறது.
வேலை முடிந்து காரில் வீடு திரும்புகிறார் சந்தோஷ் பிரதாப். சிக்னலில் வண்டி நின்ற அந்தச் சில நொடிகளில், ஒரு இளம்பெண்ணைச் சிலர் இருசக்கர வாகனத்தில் துரத்திச் செல்வது அவர் கண்களில் படுகிறது. ஆபத்தில் இருக்கும் பெண்ணைக் காப்பாற்றும் எண்ணத்தில் அவர்களைப் பின்தொடர்ந்து செல்கிறார். ஆனால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அப்பெண்ணின் வாகனம் மட்டுமே கிடக்கிறது; பெண் மாயமாகியிருக்கிறார். பதற்றத்துடன் காவல் நிலையம் சென்று புகார் அளிக்கிறார் சந்தோஷ் பிரதாப். இதே நேரத்தில், வேலைக்குச் சென்ற தன் மகள் பவ்யா திரிகா வீடு திரும்பாததால், தந்தை ஜெயப்பிரகாஷ் காவல்துறையின் உதவியை நாடுகிறார். காவல்துறை ஒருபுறம் வலைவீசித் தேட, காணாமல் போன அப்பெண்ணுக்கு என்ன நடந்த்து? இப் படத்தின் சுவாரசியம் கலந்த திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
திரைக்கதையின் மொத்த பாரத்தையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார் சந்தோஷ் பிரதாப். நள்ளிரவுச் சம்பவத்தால் தவிக்கும் சாமானியனாகவும், உண்மை உடைபடும் தருணங்களில் முற்றிலும் மாறுபட்ட முகத்தைக் காட்டும் கதாபாத்திரமாகவும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு அபாரம். வழக்கமான கமர்ஷியல் நாயகியாக இல்லாமல், இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் பவ்யா திரிகா; அவரது இயல்பான முகபாவனைகள் காட்சிகளுக்கு நம்பகத்தன்மை சேர்க்கின்றன. மற்றொரு நாயகியான பூஜிதா பொன்னாடா, பாடல்களுக்கு மட்டுமல்லாமல், கதையின் போக்கைத் திசைதிருப்பும் ஒரு முக்கியப் புள்ளியாகவும் வந்து போகிறார். அனுபவ நடிகர் ஜெயப்பிரகாஷ், காவல்துறை அதிகாரிகள் மற்றும் முனிஷ்காந்த் ஆகியோரின் பங்களிப்பு திரைக்கதைக்குத் தேவையான பலத்தைத் தந்துள்ளது.
ஒரு திரில்லர் படத்திற்குத் தேவையான உயிரோட்டத்தைத் தொழில்நுட்பக் குழுவினர் மிகச் சரியாக வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, இரவின் இருளையும், சூழலையும் தன் கேமராவால் அழகாகக் கையாண்டுள்ளார். கதாபாத்திரங்களின் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அவரது கோணங்கள் படத்திற்குப் பெரிய பிளஸ். டி. இமானின் பின்னணி இசை, காட்சிகளின் பதற்றத்தைக் கூட்டவும் இல்லை, குறைக்கவும் இல்லை; கதையின் ஓட்டத்தோடு இயல்பாகப் பயணிக்கிறது. உளவியல் ரீதியான திருப்பங்கள் நிறைந்த கதையை, பார்ப்பவர்களுக்கு எந்தக் குழப்பமும் ஏற்படாமல் நேர்த்தியாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன்.
நள்ளிரவில் நடக்கும் ஒரு சாதாரணச் சம்பவத்தை எடுத்துக்கொண்டு, அதை யூகிக்க முடியாத திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிக்கல் திரில்லராக வடிவமைத்த விதத்தில் இயக்குநர் மலர்விழி நடேசன் கவனம் ஈர்க்கிறார். ஆங்காங்கே சில கமர்ஷியல் அம்சங்கள் தலைகாட்டினாலும், விறுவிறுப்பான திரைக்கதையும், நடிகர்களின் அழுத்தமான நடிப்பும் ‘சிக்னல் அட் 11.30’ படத்தை ஒரு சுவாரசியமான தியேட்டர் அனுபவமாக மாற்றியுள்ளது.