புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு கேட்டு 7.20 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் கார்டுகள் வழங்கபட்டு ஏழை, எளிய மக்களுக்கு ரே‌ஷன் கடைகள் மூலம், அத்தியாவசியப் பொருட்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் விலையில்லா அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவையும் அடங்கும். மேலும் பேரிடர் காலங்களில் ரொக்கப்பணமும் அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் சுமார் 2 கோடியே 5 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும் 7,19,895 நபர்கள் புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு கோரி விண்ணப்பித்திருப்பதாகவும் அதில் மே மாதத்தில் மட்டும் 1,26,414 நபர்களும், ஜூன் மாதம் 1,57,497 நபர்களும், ஜூலை மாதத்தில் 2,61,529 நபர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

இதில், 4,52,188 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, 1,35,730 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,38,512 விண்ணப்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,13,676 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும், 1,31,977 விண்ணப்பங்கள் வைப்பில் உள்ளதாகவும், உணவு வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக, தென்சென்னையில் கடந்த 3 மாதங்களில் 49,920 நபர்கள் விண்ணப்பித்ததில், 17,728 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 6073 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 15,687 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதோடு, 2,041 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் வட சென்னையில், 41,431 நபர்கள் விண்ணப்பித்ததில், 16,608 விண்ணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 5,312 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதில், 15,054 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,554 நபர்களுக்கு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 3 மாதங்களில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 43,647 நபர்களும், சேலம் மாவட்டத்தில் 38,295 நபர்களும் விண்ணப்பித்துள்ளனர். என்பது குறிப்பிடதக்கது.