வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜெ.கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநரான தரணி ராசேந்திரனின் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் ‘யாத்திசை’.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரணதீர பாண்டியன் என்ற மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் இந்த ‘யாத்திசை’ திரைப்படம். வரும் ஏப்ரல் 21 அன்று இந்த ‘யாத்திசை’ திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரியும், வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனலும் பெற்றுள்ளனர்.
இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியான 6 நாட்களிலேயே 6 மில்லியன் பார்வைகளை கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இப்படம்.
யாத்திசை படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் தரணி ராசேந்திரன் கூறியதாவது..,
“தயாரிப்பாளரிடம் கதையை சொன்னபோது உன்னிடம் உள்ள தவிப்பு பிடித்துள்ளது. உன் டீம் பற்றி சொல் என்றார். இந்தப் படத்தின் உயிர் என்னுடைய டீம்தான். எடிட்டர் மகேந்திரன், இசையமைப்பாளர் சக்ரவர்த்தி இருவரும் இல்லையென்றால் நான் இல்லை. எங்களை நம்பி ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். ஒரு ஷெட்யூல் முடித்து காட்ட சொன்னார்கள். அதன் பிறகே இந்தப் படம் உருவாவது உறுதியானது.
1300 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால், அந்த காலகட்டம் அந்த மொழி வழக்கு அதையெல்லாம் உயிரோடு கொண்டு வருவது அத்தனை சவாலாக இருந்தது. அக்காலத்திய மொழியை எடுத்தால் இப்போது யாருக்கும் புரியாது என எல்லோரும் பயமுறுத்தினாலும் இதில் ஒரு கலை இருக்கிறது. சினிமா என்பது கலை, மக்கள் கொண்டாடுவார்கள் என்று தயாரிப்பாளர்தான் உறுதியாக நின்றார். அவருக்கு நன்றி.
இப்படத்திற்கு முழு உயிர் தந்தது என் குழுதான். 25 உதவியாளர்கள் இப்படத்தில் என்னுடன் வேலை செய்துள்ளார்கள். இந்தப் படத்தின் உயிர் எல்லோரையும் இழுத்து உடன் இணைந்து பயணிக்கிறது. இந்தப் படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியல்ல. ஆனால் எங்களது யாத்திசை திரைப்படம் தமிழ்த் திரையுலகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். இந்திய சினிமாவில் மிகப் பெரிய படமாக இருக்கும் எனும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது..” என்றார்.