‘பத்தா’ படத்தின் கதை இது தான்! – விஜய் சேதுபதி!

Vijay Sethupathi Decodes the Core Theme and Confirms Baththa Grand Release on October 1st!

ஸ்டார் ஸ்டுடியோ 18 மற்றும் இயக்குநர் அட்லி தயாரிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் முன்னிலையில், சென்னை சத்யபாமா கல்லூரியில்  கோலாகலமாக நடைபெற்றது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ படங்களைத் தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால் அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

விழாவில் பேசிய இயக்குநர் பாலாஜி தரணீதரன்,  “கரோனா ஊரடங்கில் எழுதிய இந்த கதையைக் கேட்டவுடன், அட்லி மற்றும் தயாரிப்பாளர்கள் உடனடியாகப் படம் பண்ண சம்மதித்தனர்” என்று நெகிழ்ந்தார்.

தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, “கதை கேட்ட உடனேயே, இந்தப் படம் உலக விழாக்களிலும் திரையரங்குகளிலும் பெரிய அளவில் பேசப்படும் என்று அட்லி சொன்ன வார்த்தை எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது” என்றார். மேலும், இயக்குநர் பாலாஜியைப் பற்றிப் பேசும்போது, “அவருக்கு இரண்டு முகங்கள் கிடையாது, யாரைப் பற்றியும் தவறாகப் பேசாத ஒரு அழகான மனிதர்” எனப் பாராட்டினார்.

படத்தின் கதைக்களம் குறித்துப் பேசிய விஜய் சேதுபதி, “ஒரு வீரனும் அறிவாளியும் ஒரு அப்பாவியான மனிதனைச் சந்திக்கும் போது நடக்கும் மாயம் தான் இந்தப் படம்; அந்த அப்பாவித்தனத்துக்குள் இருக்கும் அறிவை எவ்வளவு பெரிய சக்தியாலும் வெல்ல முடியாது” என்று படத்தின் மையக்கருத்தை வெளிப்படுத்தினார். தனக்கு ஜோடியாக நடித்த லிஜோமோலின் எதார்த்தமான நடிப்பைப் பாராட்டியவர், “விருதுகளைப் பெறும் படம், மிகப்பெரிய வசூலைப் பெறும் படம் என்று இரண்டையும் எப்படி ஒரே படத்தில் சாத்தியப்படுத்த முடியும் என்ற கேள்விக்கு ‘பத்தா’ தியேட்டரில் பதில் சொல்லும்” என்று நம்பிக்கையோடு முடித்தார்.