‘மீசைய முறுக்கு 2’, இசைக் கலைஞர்களின் உலகளாவிய போராட்டம்! – ஹிப்ஹாப் ஆதி!

Hiphop Tamizha Adhi's Meesaya Murukku 2 Worldwide Grand Release on September 25!

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பல்கலை திறமையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. காதல், நடனம் மற்றும் இசைக் கொண்டாட்டத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய ஹிப்ஹாப் தமிழா ஆதி,

கடந்த இரண்டு ஆண்டுகள் உலகம் முழுவதும் பல்வேறு இசைப் பயணங்களை மேற்கொண்ட பிறகு, மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஊடகங்களையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.

எப்போதும் பக்கபலமாக இருக்கும் தயாரிப்பாளர் சுந்தர் சி. மற்றும் குஷ்பு மேடம் ஆகியோரின் முன்னிலையில் இந்தத் தருணம் அமைந்தது தமக்குக் கூடுதல் அர்த்தத்தையும் உத்வேகத்தையும் தந்துள்ளதாக நெகிழ்ந்தார்.

முதல் பாகத்திற்கும் இதற்கும் உள்ள முக்கியக் கதை வேறுபாட்டைப் பகிர்ந்து கொண்ட ஆதி, முந்தைய ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் முழுக்க முழுக்க தனது சொந்த வாழ்க்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக் படைப்பாக இருந்தது. தற்போது தயாராகியிருக்கும் ‘மீசைய முறுக்கு 2’ உலகளாவிய கதைக்களத்தைக் கொண்டது. இது இசை, இசைக் கலைஞர்கள்

வாழ்க்கையைப் பற்றிய கதை என்றும், இசையையே தங்களது முழுநேர வாழ்க்கைப் பாதையாகவும் லட்சியமாகவும் தேர்ந்தெடுக்கும் எளிய மனிதர்களின் கனவுகள், அவர்களின் அன்றாடப் போராட்டங்கள், உணர்ச்சிப்பூர்வமான பயணங்கள் மற்றும் ஒரு பொதுவான உலகளாவிய கதையாக இப்படம் தியேட்டர்களில் ரசிகர்களைக் கவரும் என்றும் நம்பிக்கையுடன் கூறினார். இத்திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, விளிம்புநிலை கானா கலைஞர்களின் உலகத்தை பிரதிபலிக்கிறது. இது வாழ்க்கையின் மூன்று வெவ்வேறு காலகட்டத்துப் பயணங்களை விவரிக்கும் ஒரு வாழ்வியல் கதை. ரசிகர்கள் கொண்டாடும் படமாக இது நிச்சயம் இருக்கும் என்றார்.