‘கருப்பு பல்சர்’ – விமர்சனம்!

தினேஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். வில்லனாக பிரின்ஸ் அஜய், மற்றும் மன்சூர் அலிகான், சரவணன் சுப்பையா, கலையரசன் கன்னுசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ். ‘Yasho Entertainment’ சார்பில், Dr. சத்யா முரளி கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

தினேஷ், RO வாட்டர் மெஷின்களை விற்று வருபவர். தங்கைக்கு திருமணம் ஆன நிலையில், தனக்கான பெண்ணை மேட்ரிமோனி ஆப் மூலமாக தேடி வருகிறார். அதேபோல் ரேஷ்மா வெங்கடேஷ், மேட்ரிமோனி ஆப்பில் மாப்பிள்ளை தேடி வருகிறார்.  அதன் மூலமாக இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொள்ள, அவர்களுக்குள் காதல் உருவாகிறது. இந்நிலையில், காதலிக்காக ஒரு கருப்பு நிற பல்சர் பைக்கினை தினேஷ் வாங்குகிறார். இருவரும் அதில் பயணம் செய்யும் போது அமானுஷ்யமான முறையில் விபத்து ஏற்படுகிறது. இவ்வாறு யார் அந்த பைக்கினை ஓட்டினாலும் விபத்து ஏற்படுகிறது. மிகுந்த குழப்பம் அடைகிறார், தினேஷ். இந்நிலையில், மதுரையில் வட்டித்தொழில் செய்யும் பிரின்ஸ் அஜய்யும், சென்னையில் வாட்டர் கேன்  விற்பனை செய்துவரும் மன்சூர் அலிகானும் தினேஷ்சை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். ஏன் எதற்கு என்பது தான், ‘கருப்பு பல்சர்’ படத்தின் கதை.

தினேஷ், மதுரையைச் சேர்ந்த மாடுபிடி வீரராகவும், சென்னையில் வசிக்கும் இளைஞனாகவும் இரட்டை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு மாடு பிடிக்கும் காட்சியில், நிறைந்த உழைப்பினை கொடுத்திருக்கிறார். காதலி ரேஷ்மா வெங்கடேஷுடன் சுற்றிவரும் காட்சிகளில் ஜாலியாகவும், மதுனிகாவின் கணவராக வரும் காட்சிகளிலும் இரு வேறுவிதமான நடிப்பினை கொடுத்து ரசிக்க வைக்கிறார்.

ரேஷ்மா வெங்கடேஷுக்கு அநேக காட்சிகள். அனைத்திலும் தனது அழகினாலும், நடிப்பினாலும் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். மதுரையில் நடக்கும் கதைக்களத்தில் சில காட்சிகளில் நடித்திருக்கிறார். புதுமணப் பெண்ணாக கவனிக்கத்தக்க நடிப்பினை கொடுத்துள்ளார்.

தினேஷின் நண்பனாக நடித்திருக்கும் பிராங்ஸ்டர் ராகுல் ஒரு சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். மற்ற காட்சிகளில் சிரிக்க வைக்க முடியாமல் தவித்திருக்கிறார். காமெடி காட்சிகளும் சரிவர எழுதப்படவில்லை.

வில்லன்களாக பிரின்ஸ் அஜய், மன்சூர் அலிகான் இருவரும் பெரிதாக கவரவில்லை. பேயோட்டும் நடிகராக நடித்திருக்கும் நடிகர் கவனம் ஈர்த்தாலும், அவ்வப்போது எதற்காக வருகிறார், என்பது தெரியவில்லை. கதையோட்டத்திற்கும் அவரது காட்சிகள் உதவவில்லை. க்ளைமாக்ஸில் மட்டும் கதைக்குள் வந்து அநியாயமாக சாகிறார்.

பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவும், இன்பாவின் இசையும் கவனிக்கத்தக்க வகையில் இருக்கிறது. கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கும் முரளி கிரிஷ், நல்ல கதையாக யோசித்திருக்கிறார். ஜனரஞ்சகமான, வெற்றிப்படத்துக்குரிய அனைத்து அம்சங்களும் கதையில் இருந்தும் திரைக்கதை மிகப்பெரிய சொதப்பலாக அமைக்கப்பட்டிருப்பதால் வெற்றி பறிபோயுள்ளது.