லாக்டவுன் திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருடன் நிரோஷா, லிவிங்ஸ்டன், அபிராமி, சார்லி, இந்துமதி, பிரியா வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் AR ஜீவா, வெழுதி இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு சக்திவேல். இசை சித்தார்த் விபின் மற்றும் NR ரகுநந்தன். ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சுபாஷ்கரன், G.K.M. தமிழ்குமரன் தயாரித்துள்ளனர்.
அனுபமா பரமசிவன், ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தை சேர்ந்த பெண். படித்து முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். அந்த சூழலில் தன்னுடைய தோழியின் பரிந்துரையின் பெயரில், அவரும் தோழியும் ஒரு இரவு பார்ட்டிக்கு செல்கிறார். அங்கே ஆண், பெண் என வித்தியாசம் இல்லாமல் அனைவரும் போதையில் ஆட்டம் போடுகின்றனர். தயங்கியபடியே, அனுபமா பரமேஸ்வரனும் அதில் கலந்து கொண்டு, குடித்து விட்டு ஆட்டம் போட்டபடி போதையில் மயங்கி விழுகிறார். அந்த சந்தர்பத்தினை பயண்படுத்திக்கொள்ளும் முகம் தெரியாத நபர் ஒருவர், அவரை கர்ப்பமாக்கி விடுகிறார். தான் கர்ப்பமானது தெரியாமலேயே நாட்களக் கடத்தும் அனுபமா பரமேஸ்வரன், அது தெரிய வரும் போது கடும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இதனிடையே, பாதுகாப்பான கருக்கலைப்பு சாத்தியமில்லாமல் போகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் லாக்டவுன். இந்தக் கதை, படமும் பாடமுமாக பல விஷயங்களை பேசியிருக்கிறது. ஒரு அறிமுக இயக்குநரிடமிருந்து வலிமையான படைப்பு எப்படி? என ஆச்சர்யப்பட வைக்கிறார். இயக்குநர் AR ஜீவா.
அனுபமா பரமேஸ்வரன், ‘அனிதா’ என்ற கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில் வேறு வழியில்லாமல் சமரசம் செய்துகொள்ளும் திடுக்கிட வைக்கும் அந்த சர்ச்சைக் காட்சியில், நடிப்பதற்கு பலரும் தயங்குவர். ஆனால், அந்தக்காட்சியை தைரியமாக அனுகியிருக்கிறார். குற்ற உணர்ச்சி, செய்வதறியாது திகைத்து நிற்பது, தனிமை, வெறுப்பு, இயலாமை, சமூக அழுத்தம் என அனைத்து உணர்ச்சிகளையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். தனிமையில் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணின் உணர்ச்சியை இவரை விட அழுத்தமாக வெளிப்படுத்தி விடமுடியுமா? எனும் அளவில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திதிருக்கிறார். நிரோஷா, லிவிங்ஸ்டன், அபிராமி, சார்லி ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்து திரைக்கதையை நகர்த்திச் செல்கின்றனர்.
சித்தார்த் விபின் மற்றும் NR ரகுநந்தன் ஆகியோரின் இசை, படத்திற்கு பலமாக இருக்கிறது. பல இடங்களில் இசை மௌனித்திருப்பது காட்சியின் கணத்தை மேலும் கூட்டுகிறது. சக்திவேலின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு பெரிய வலிமை சேர்த்துள்ளது. காட்சிகளுக்கேற்ற கலர் வடிவமைப்பும், கோணங்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. எடிட்டிங், V.J. சாபு ஜோசப் சிறப்பாக எடிட் செய்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் AR ஜீவா, ஒரு சம்பவத்தை வழக்கமான சினிமாவுக்குள் முடக்காமல், அனிதா என்ற அந்த கதாபாத்திரம் சந்தித்த மனிதர்களையும், அவர்களை எதிர்கொண்ட விஷயத்தையும் சொல்லியிருக்கிறார். பிள்ளைகள் தங்களது பிரச்சனை குறித்து பெற்றோர்களை அனுகுவதும், போதை கலாச்சார உலகில் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியங்கள் குறித்து பேசியிருப்பதும் பாராட்டுக்குரியது.