வடிவுக்கரசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருடன் சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு மணிகண்டன். இசை செல்லையா பாண்டியன். எழுதி இயக்கியிருக்கிறார், விஜயகுமாரன். இத்திரைப்படத்தை விஜயா மேரி யுனிவர்சல் மீடியா’ நிறுவனம் சார்பில், விஜயா மேரி தயாரித்துள்ளார்.
ஒரு கிராமத்தில் நடக்கும் சிறுமியின் மர்ம மரணம். அதைத்தொடர்ந்து நடக்கும் போலீஸ் விசாரணை. அடுத்தடுத்து நடக்கும் அமானுஷ்யமான விஷயங்கள் தான் படம். அதாவது, இறப்பு இல்லாமல், நீண்ட நாட்கள் இளமையுடன் வாழ கணவன், மனைவி இருவரும், தங்களது சொந்த வீட்டிலிருந்தே மாந்த்ரீக வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதற்காக குறிப்பிட்ட சில குழந்தைகளின் இதயம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. அதன் மூலம் சில சம்பவங்களும் நடக்கிறது. அந்த கிராமத்தில் வசிக்கும் மற்றவர்கள் இந்த மாந்த்ரீக வேலைகளை தடுத்து நிறுத்தி, மாந்த்ரீகம் செய்தவரை, மனைவியின் கண்முன்னே உயிருடன் எரிக்கின்றனர். அதன் பிறகு, அந்த வீட்டிற்கு வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு குடும்பம் குடியேறுகிறார்கள்.
அந்த வீட்டு வாசலில், பார்த்தாலே மிரளும் தோற்றம் கொண்ட ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி மயங்கி விழுகிறார். அதைபார்க்கும் அந்த வீட்டின் உரிமையாளர் அடைக்கலம் தருகிறார். அதன் பிறகு, அந்த வீட்டிலிருக்கும் இரண்டு குழந்தைகளும் அந்த குடும்பத்தினரும், அந்த மூதாட்டியிடும் சிக்குகின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதை நெஞ்சை உறையவைக்கும் வகையில், திரைக்கதை அமைத்து படமாக்கியிருக்கிறார், இயக்குநர் விஜயகுமாரன்.
படத்தின் முதல் காட்சியிலிருந்தே பார்வையாளர்களுக்கு ஒரு வித படபடப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளனர். கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சிறுமியின் மர்ம மரணம், போலீஸ் விசாரணை தொடங்கும் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் காட்சிவரை ஒரு பதட்டத்துடனும் பயத்துடனும் காட்சிகள் செல்கிறது.
மர்ம மரணம் குறித்து விசாரணை செய்யும் போலீசார்களாக திலீபனும், சிங்கம்புலியும் அந்த காட்சிகளுக்கு வலுசேர்த்து, திரைக்கதையை அடுத்தகட்டத்திற்கு விரைவாக நகர்த்துகிறார்கள். ஆனந்த் நாக், பூர்வீக வீட்டிற்குள் என்ட்ரி, அதன் பிறகு வடிவுக்கரசி, வயது முதிர்ந்த ஒச்சை கதாபாத்திரத்தில் அறிமுகம். அவரை அடையாளம் காணும் கஜராஜ் இப்படி ஒவ்வொருவர்களாக, கதைக்குள் என்ட்ரி கொடுக்கும் போது திகில் கூடிக்கொண்டே போகிறது.
ஒச்சை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவுக்கரசி, நடிப்பில் மிரட்டுகிறார். அவருக்கான புரோஸ்தெடிக்ஸ் மேக்கப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அவரது கதாபாத்திரமும், தோற்றமும் பலரையும் மிரட்டுகிறது. பழமையான அந்த பங்களாவையும், அந்த கிரமத்தையும் சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் ரசிகர்களுக்கு பய உணர்வை கூட்டியிருக்கிறார். கதைக்கு ஏற்றபடி ஒளிப்பதிவு செய்துள்ளார் மணிகண்டன். காட்சிகளுக்கேற்றபடி இசையமைத்திருக்கிறார், செல்லையா பாண்டியன்.
ஒச்சையின் பிண்ணனியை சொல்லும் காட்சிகள் அதிக நீளம். அதை தவிர்த்திருக்கலாம். ஒரு சில இடங்களில் சலிப்பும் வரத்தான் செய்கிறது. குறிப்பாக எடிட்டர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், மிகப்பெரிய திகில் அனுபவம் கொடுத்திருக்கும் படமாக அமைந்திருக்கும்.
ஹாரர் ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும்!