பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், திருநாவுக்கரசு, ஜென்சன் திவாகர், ஜெயா, பார்க் ஹே-ஜின், நோஹூ ஜின், ஜாங் ஜேஹியான் உள்ளிட்ட பலரது நடிப்பினில், ‘நெட்ஃபிளிக்ஸ்’ தளத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், ‘மேட் இன் கொரியா’. இத்திரைப்படத்தை ‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்’ சார்பில், ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். ரா. கார்த்திக் எழுதி இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு, பிரசன்ன குமார். பாடல்களுக்கு இசையமைத்தவர்கள் ஹேஷாம் அப்துல் வஹாப், சைமன் கே. கிங், தரன் குமார். பின்னணி இசையமைத்திருக்கிறார், தரன் குமார். இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தென் கொரியாவில் படமாக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
சிறுவயதிலேயே, தென் கொரிய நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தால் அதிகம் ஈர்க்கப்பட்டவர், பிரியங்கா மோகன். தனது, நீண்ட நாள் காதலன் ரிஷிகாந்துடன் கொரியாவில் செட்டிலாக விரும்புகிறார். இது அவரது வாழ்நாளின் பெருங்கனவு. இதை, சீர்குழைக்கும் விதமாக காதலர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை உருவாகிறது. சந்தோஷமாக செல்ல வேண்டிய கொரியாவிற்கு, தன்னந்தனியாக பெரும் மன அழுத்தத்துடன் செல்கிறார், பிரியங்கா மோகன். தங்குவதற்கு நிரந்தரமான இடமோ, வேலையோ இல்லாத, மொழி புரியாத சூழலில் அவர் சந்திக்கும் இக்கட்டான பிரச்சனைகளும், சாதனைகளுமே ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் ‘எமோஷனல் டிராமா’ வடிவிலான ரசிக்கத்தக்க திரைக்கதையும், க்ளைமாக்ஸூம்!
‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், பிரியங்கா மோகன். தனது கதாபாத்திரத்தினை உணர்ந்து அரவணைப்பு, மகிழ்ச்சி, துக்கம், ஏமாற்றம், முயற்சி என அனைத்து உணர்வுகளையும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். படத்தில் காணப்படும் லாஜிக் மீறல்கள், இவரது நடிப்பு மறைத்து விடுகிறது.
பிரியங்கா மோகனின் பெற்றோர்களாக நடித்திருப்ப்வர்கள். காதலராக நடித்திருக்கும் ரிஷிகாந்த், ஜென்சன் திவாகர், ஜெயா மற்றும் கொரிய நாட்டின் நடிகர்களான பார்க் ஹே-ஜின், நோஹூ ஜின், ஜாங் ஜேஹியான் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
‘மேட் இன் கொரியா’ திரைப்படத்திற்கு, நடிகர்களின் பங்களிப்பு பலம் சேர்த்துள்ளது போல், ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. ஒரு சில காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டிருக்கிறது. பல காட்சிகள் கொரியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஊட்டிக்கும், கொரியாவிற்கும் நேரில் சென்ற உணர்வினை படத்தின் காட்சிகள் கொடுக்கின்றன. இரவு நேரத்தில் ஜொலிக்கும் கொரியாவின் அழகும், கலை நேரத்தில் பூவாய் பொழியும் பனிக்காட்சிகளும் சுகமான அனுபவங்களாக இருக்கின்றன. திரைப்படம் மெதுவாக சென்றாலும், அலுக்கவோ, சலிக்கவோ இல்லை.
சக மனிதர்கள் மீது காட்டப்படும் அன்பும், சகிப்புத் தன்மையும் வாழ்க்கையை முன்னேற்றி செல்வதற்கு அதிகம் தேவை. எந்த சூழ்நிலையானாலும் கிடைத்தவற்றை வைத்துக்கொண்டு ஜெயிக்கலாம். என்பதையும் உணர்ச்சிக்குவியலோடு, நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் ரா. கார்த்திக்.
‘மேட் இன் கொரியா’ – (Journey of Resilience) நெகிழ்ச்சிப் பயனம்!