‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ், ‘ஜியோ ஹாட் ஸ்டார்’ டிஜிட்டல் தளத்தில் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. இதில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா ,பாலாஜி சக்திவேல் ,சிந்து, இர்ஷாத் அலி, அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன், ஆர் அமரேந்திரன், சாதனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸை, ‘காக்கா முட்டை’ மணிகண்டன் மற்றும் அஜித் குமார் இயக்கியுள்ளனர். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார்.
‘ஜியோ ஹாட் ஸ்டார்’ டிஜிட்டல் தளத்திற்காக, ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில், நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார்.
மதுரை, கிராமப்புறத்தில் மிகக்குறைவான மக்கள் கொண்ட ஒரு சிறிய ஊர். அங்குள்ள காவல் நிலையத்தில், சப் இன்ஸ்பெக்டர் முத்து குமார், சிங்கம்புலி, வடிவேல் முருகன் உள்ளிட்ட சில காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த காவல் நிலையத்துக்கு ஆட்களும் வருவதில்லை. புகார்களும் வருவதில்லை. காவல் நிலையத்திற்குள் பாம்பு புகும் அளவிற்கு ஆள் நடமாட்டமின்றி இருக்கிறது. இதனால், காவல் நிலையம் மூடப்படும் நிலையில் இருக்கிறது. அந்த ஊரிலேயே பணிபுரிய நினைக்கும் வடிவேல் முருகனுக்கு இது பிடிக்கவில்லை. இந்நிலையில், விஜய் சேதுபதியின் வெட்டப்பட்ட தலை, ஊருக்குள் வெளியே உள்ள மலைப்பகுதியில் கிடக்கிறது. இந்தத் தலையை கைப்பற்றி சப் இன்ஸ்பெக்டர் முத்து குமார், சிங்கம்புலி, வடிவேல் முருகன் ஆகியோரது உதவியுடன் விசாரணையை தொடங்குகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘முத்து என்கிற காட்டான்’.
‘முத்து என்கிற காட்டான்’ வெப்சீரிஸின் முதல் தொடரிலேயே, விஜய் சேதுபதியின் வெட்டப்பட்டத் தலை காட்டப்படுவதால் சுவாரசியம் உடனே தொற்றிக்கொள்கிறது. விஜய்சேதுபதி கொல்லப்பட்டாரா, இல்லையா? கொல்லப்பட்டால், ஏன் கொல்லப்பட்டார்? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகிறது. அதன் பிறகு அதற்கான தேடலில் வரும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் அடுத்தடுத்த தொடர்களினால் வெளியாகிறது. இருந்தாலும், பெரும்பாலான தேவையற்ற காட்சிகளால், கடும் சோர்வு ஏற்படுகிறது. அதை தவிர்த்திருந்தால், ரசிக்கத்தக்க வகையில் சிறப்பாக இருந்திருக்கும்.
விஜய் சேதுபதி. தொடர் முழுவதும் ஒரே மாதிரியான நடிப்பு, சலிப்பு ஏற்படுத்துகிறது. மிலிந்த் சோமனின் நடிப்பும் பெரிதாக ரசிக்கும்படி இல்லை. சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா, சாதனா ஆகியோரில், வடிவேல் முருகன் அவரது அம்மாவாக நடித்த நடிகை, விஜே பார்வதி ஆகியோரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.
படம்பிடிக்கப்பட்ட பகுதிகள், ரசிக்கும் வண்ணம் சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவு செய்த மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். இசை அமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையும் குறை சொல்லும்படி இல்லை.
‘முத்து என்கிற காட்டான்’ – ஏமாற்றம்!