செல்வராகவன், கௌசல்யா, Y.Gee.மஹேந்திரன், Mime.கோபி, குஷி ரவி நடிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், A.K.பிரியன் இசையமைப்பில், சதீஷ் நடித்து தயாரித்திருக்கும் படம் தான் “மனிதன் தெய்வமாகலாம்”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துக்கொண்ட விருந்தினர்கள் பேசியபோது,
இயக்குனர்/நடிகர் செல்வராகவன் பேசுகையில்,
முதலில் சக்தி பிலிம் ஃபேக்டரி பற்றி சொல்லணும். நான் அவர்களின் படங்களை எப்போதுமே கவனித்து பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் தேர்ந்தெடுத்து படங்களை தயாரிப்பார்கள்; ஆனால் எதை எடுத்தாலும் அதைக் பெரிய அளவில், தரமாக மக்கள் முன் கொண்டு சேர்ப்பார்கள். அந்த பேனரில் ஒரு படத்தில் நான் இருக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்காக மிக்க நன்றி, சார்.
இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, ஷூட்டிங்கிற்குப் போனபோது ஒரு விஷயம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எல்லோரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தார்கள். ஒருவித அதிரடியான உழைப்பு அந்த செட்டில் இருந்தது. சில நேரங்களில் பார்த்து “இவர்கள் எப்போது சாப்பிடுறாங்க, எப்போது ஓய்வு எடுக்குறாங்க?” என்று கூட யோசித்திருக்கேன். அந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ். அந்த அசாதாரண உழைப்புக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
தயாரிப்பாளர் சார் பற்றி சொல்லணும்னா, ஆரம்பத்தில் அவரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர் பார்த்தபோது, இந்த படத்திற்கு அவர் கொடுத்த ஆதரவு மிகப் பெரியது. எங்களுக்கு முழுமையான சப்போர்ட் கொடுத்து, இந்த திட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற உதவியிருக்கிறார். இசை பற்றி சொல்லணும்னா, நான் சில வரிகள் மட்டும் கேட்டவுடனே “யார் இந்த இசையமைப்பாளர்?” என்று கேட்க வைத்தது. அந்த அளவுக்கு இசை மிகவும் இனிமையாகவும், தரமாகவும் இருந்தது. இந்த படத்திற்கு அருமையான இசையை கொடுத்திருக்கிறார். அவருக்கு என் பாராட்டுகள். அதேபோல், இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கௌசல்யா மேம் பற்றி சொல்லணும்னா, திரையில் பார்த்த அளவுக்கு கூட, நேரில் இன்னும் அமைதியான, மென்மையான மனிதர். அவருடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம்.
அதற்கு முழுக்க எதிர்மாறாக குஷி — அவங்க எங்க இருந்தாலும் அந்த இடமே சந்தோஷமா இருக்கும் மாதிரி ஒரு positive energy. எப்போதும் சிரிப்புடன் இருப்பது ஒரு பெரிய வரம். அந்த energy எல்லாருக்கும் பரவுவது இந்த படத்திலும் தெரியும். மொத்தத்தில், இது ஒரு அருமையான டீம். இந்த குழு இன்னும் பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன், நன்றி என்றார்.
நடிகை கௌசல்யா பேசுகையில்,
இந்த மேடையில் பேசுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், ஒருவித பெருமையாகவும் இருக்கிறது. இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர்கள்; உங்கள் அனைவரின் வருகையும் என்னை உண்மையிலேயே நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
முதலில் இயக்குநர் டென்னிஸ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த படத்தில் எனக்கு மிகவும் அழகான மற்றும் வலுவான கதாபாத்திரத்தை உருவாக்கி அளித்ததற்கு மிக்க நன்றி. இந்த படத்தின் தீவிரத்தையும், அதன் உணர்ச்சிப் பூர்வமான களத்தையும் நம்பி தான் நான் இந்த திட்டத்தில் இணைந்தேன்.
அடுத்து தயாரிப்பாளர்கள் சதீஷ் சார் மற்றும் விஜயா மேம் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி. உங்கள் திட்டமிடல், ஒழுங்கு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்த படத்தை சிறப்பாக முடிக்க முடிந்தது. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் அதிகமாக இருந்தால், தமிழ்சினிமா இன்னும் உயர்ந்த நிலையை அடையும் என்பது என் நம்பிக்கை.
செல்வா சார், உங்களுடன் இணைந்து நடிப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் நீங்கள் கொடுத்த அந்த கம்பர்ட் மற்றும் ஆதரவு காரணமாக பல விஷயங்கள் மிகவும் இயல்பாக அமைந்தது. அதற்காக மிக்க நன்றி.
குஷி, பெங்களூரிலிருந்து வந்து முழு அர்ப்பணிப்புடன் இந்த படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் கடின உழைப்புக்கு மனமார்ந்த நன்றி.
ஒரு பெரிய விஷயத்தை அழகாக காட்சிப்படுத்துவது சுலபம். ஆனால் ஒரு எளிய விஷயத்தை அழகாக காட்சிப்படுத்துவது தான் உண்மையான சவால். அந்த சவாலை நம்முடைய ஒளிப்பதிவாளர் ரவி வர்மா அவர்கள் மிகச் சிறப்பாக செய்து காட்டியுள்ளார். அவருக்கு என் நன்றி.
இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் அவர்களை இன்று தான் நேரில் சந்தித்தேன். இது அவர்களின் முதல் படம் என்று சொன்னார்கள்; ஆனால் அதை உணர முடியாத அளவுக்கு பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடனமாடியது அவர்களின் இசைக்காக தான். அந்த அளவுக்கு இனிமையான இசையை வழங்கியதற்கு நன்றி.
இறுதியாக, எங்கள் முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த திரைப்படம். கண்டிப்பாக அனைவரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் பேசுகையில்,
நான் சொல்ல வேண்டிய பல விஷயங்களை ஏற்கனவே தயாரிப்பாளர் சதீஷ் சார் அழகாக கூறிவிட்டார். அதனால் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு மற்றவர்களை தவறவிட விரும்பவில்லை. இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்தக் கதையை எழுதிக்கொண்டிருந்தபோது, பொதுவாக ஒரு கதையில் ஒரு ஹீரோ, ஒரு வில்லன் இருக்கும். ஆனால் வாழ்க்கையிலே போல, ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு எதிர் திசை இருக்கும் — பகல், இரவு; நிழல், நிஜம்; இன்பம், துன்பம். இந்த எல்லா பரிமாணங்களும் ஒரே கதைக்குள் வந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்தக் கதையை உருவாக்கினேன்.
அதில், நல்லவனாக செல்வராகவன் சார் அவர்களை தேர்ந்தெடுத்தேன். வலுவான எதிர்மறை கதாபாத்திரமாக மைம் கோபி சார் அவர்களை தேர்ந்தெடுத்தேன். இந்த கதையை சொன்னவுடன், “உனக்காக எதுவாக இருந்தாலும் நான் செய்வேன்” என்று உடனே ஒப்புக்கொண்டார். அந்த நம்பிக்கைக்கும் அன்பிற்கும் நான் மிகவும் நன்றி கூறுகிறேன். அந்த கதாபாத்திரம் அவருக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
செல்வராகவன் சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரை பார்த்து இன்ஸ்பையர் ஆகி இயக்குநராக வர முயற்சி செய்தவர்களில் நானும் ஒருவன். அவரை நேரில் சந்திப்பதே ஒரு கனவாக இருந்தது. ஆனால் இன்று அவருடன் சேர்ந்து வேலை செய்து, ஒரே மேடையில் உட்கார்ந்து பேசுவது — அது எனக்கு கனவு நனவான மாதிரி உணர்ச்சி. இந்த படத்தின் மூலம் அவருடைய நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன், சார்.
ஒரு சிறிய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு முக்கியமான சீன் நாங்கள் இரவு நேரத்தில் பெரிய செட்டப்பில் படமாக்கிக் கொண்டிருந்தோம். நேரம் கடந்து குளிரும் அதிகமாகி, சார் உடல்நலமும் சற்று பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் ஷூட்டிங்கை நிறுத்த வேண்டிய நிலை வந்தது. ஆனால் அந்த சீனின் flow கெடக்கூடாது, தயாரிப்பாளருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்று நினைத்தார். சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு, திரும்பி வந்து “இந்த சீனை முடித்துவிட்டு போகலாம்” என்று சொன்னார். அப்படியே அந்த சீனை முடித்து கொடுத்தார். அந்த தருணம் எனக்கு மிகவும் பெரிய பாடமாகவும், ஒரு இயக்குநராக இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு என்ன என்பதை உணர்த்திய அனுபவமாகவும் இருந்தது.
இந்த படத்தில் நடித்த குஷி மேம் — இந்த கதையை கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டார். இது ஒரு கணவன்-மனைவி உறவின் பின்னணியில் உள்ள அழகான காதல் கதையை பேசுகிறது. திருமணத்திற்கு பிறகும் காதல் இருக்கிறது என்பதை இந்த படம் காட்டும். கௌசல்யா மேம், ஒய்.ஜி. மகேந்திரன் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களின் அனுபவத்தால் இந்த படத்திற்கு பெரிய வலு சேர்த்திருக்கிறார்கள்.
இந்த படத்தை வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உங்கள் முன் கொண்டு வருகிறோம். நீங்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். மிக விரைவில் இந்த படத்தின் வெற்றி விழாவில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். என்றார்.