துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ், வசுந்தரா, நரேன் மணி, ஜெயசூர்யா, கிறிஸ்டினா மேரி, ஷர்மிளா அக்ஷதா அஜித், கவின், சரவண சக்தி, என். அருண்மொழித்தேவன் , மீனாள், துரை சுதாகர் உள்ளிட்ட பலரது நடிப்பினில், உருவாகியிருக்கும் ‘எக்ஸாம்’ – இணையத் தொடர், அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) வெளியாகியிருக்கிறது. இத் தொடரினை ஏ. சற்குணம் எழுதி இயக்கியிருக்கிறார்.
அவ்வப்போது செய்தித்தாள்களில் இடம்பெறும், அரசுப்பணி தேர்வுகளில் நடக்கும் ஒரு பெரிய மோசடியை, விறு விறுப்பான திரைக்கதை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் ஏ சற்குணம்.
டி எஸ்பி யாக பணியாற்றி வரும் அதிதி பாலன் ஒரு ஊரிலிருந்து, இன்னொரு ஊருக்கு மாற்றலாகி செல்கிறார். அப்படி அவர் பயணம் மேற்கொள்ளும் நேரத்தில், துஷாரா விஜயன் அவரைக் கடத்தி விட்டு, அவரது பணியில் சேர்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான், எக்ஸாம் இணையத்தொடரின் பரபரப்பான, விறுவிறுப்பான திரைக்கதை.
‘எக்ஸாம்’ இணையத் தொடர் ஏழு பகுதிகளை கொண்டுள்ளது. முதல் மூன்றுபகுதிகள் அடுத்தது என்ன நடக்கும் என்ற பரபரப்பில் செல்கிறது அதன் பின்னர் கொஞ்சம் சுமாராக செல்கிறது. மொத்தமாக பார்த்து முடிக்கும் போது ஒரு சுவாரசியமான க்ரைம் த்ரில்லரை பார்த்த உணர்வு ஏற்படுகிறது. சில இடங்களில் லாஜிக் துருத்திக்கொண்டு நின்றாலும் சுவாரசியம் கெடவில்லை.
துஷாரா விஜயன், மலைவாழ் பழங்குடிப் பெண்ணாகவும், டி எஸ்பி ஆகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் கவனம் பெறுகிறார். அதிதி பாலனுக்கு நடிப்பதற்கு அதிகமான காட்சிகள் இல்லை. கிடைத்த காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அப்பாஸ், நரேன் மணி , துரை சுதாகர் உள்ளிடோரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
க்ரைம், த்ரில்லருக்கு ஏற்ற வகையில் சாம் சி.எஸ் பின்னணி இசை அமைந்திருக்கிறது. அருண் அமரேந்திரனின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.
படிப்பினை மட்டுமே மூலதனமாக கொண்டு, அரசு வேலைக்காக போராடும் திறன் படைத்த மாணவர்களின் வேலையை பணம் படைத்தவர்களால் தட்டிப்பறிக்கும் செயலை, மிக அழகாக திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள். தொடரில் இடம்பெற்ற அந்த சம்பவத்தைப்போல், சில நாட்களுக்கு முன்னர் செய்தித்தாளில் நீட் தேர்வு குறித்த செய்தி இடம் பெற்றது. அதிர்ச்சி அளிக்கிறது.
‘எக்ஸாம்’ – நல்ல க்ரைம் த்ரில்லர்!