பாபு விஜய் எழுதி இயக்கியிருக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், சரவண சுப்பையா, கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், சட்டென்று மாறுது வானிலை’. ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைத்திருக்கிறார், கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.
அமைச்சரின் ஒரே மகள் மீனாட்சி. இவருடைய கோடிக்கணக்கன சொத்தை அடைய, அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் ஒரு தொழிலதிபர். மீனாட்சியின் அழகில் மயங்கும் ஒரு அரசியல்வாதி அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். இதனிடையே ஜெய்யும் மீனாட்சியும் காதலில் விழுகின்றனர். அதோடு, கடும் எதிர்ப்பினை மீறி அமைச்சரின் மகள் மீனாட்சியை திருமணம் செய்து கொள்கிறார்.
ஜெய் – மீனாட்சி இருவரும் தேனிலவுக்காக கொடைக்கானல் செல்கின்றனர். அங்கே கருடா ராம் நடத்தி வரும் ஹோட்டலில் தங்குகின்றனர். அந்த ஹோட்டலில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது ஜெய்க்கு தெரிய வருகிறது. அதன் தொடர்ச்சியாக மீனாட்சி காணாமல் போகிறார். சில மர்ம மரணங்களும் நடக்கிறது. மீனாட்சியை, ஜெய் கண்டுபிடித்தாரா? என்பதே ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறார், ஜெய். வழக்கமான தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார். காதல் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் தனித்த கவனம் பெறுகிறார். சிக்கலில் மாட்டிக்கொண்டு, மீனாட்சியிடம் உண்மையை மறைக்கும் காட்சிகளில் தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்துகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் அழகிலும், நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார்.
யோகி பாபு, வழக்கமான வறன்ட நகைச்சுவைக் காட்சிகள் மூலம் சலிப்பூட்டுகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா, ஆதித்யா கதிர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசை, ஓகே.
க்ரைம், காதல், சென்டிமென்ட் என திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையாக இருந்தாலும் சுவாரசியம் சில இடங்களில் காணாமல் போகிறது. சில இடங்களில் குழப்பம் ஏற்படுவதை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எழுதி இயக்கியிருக்கும் பாபு விஜய், ஹோட்டலில் நடக்கும் சைபர் குற்றங்களையும் அதன் பின்னணியையும் வைத்து ஒரு கமர்ஷியல் படத்தினை கொடுக்க முயற்சித்திருக்கிறார். மற்றபடி படத்தில் குறிப்பிட்டுச்சொல்ல எதுவுமில்லை!