“மருமகள் வீட்டு வேலை செஞ்சா தப்பில்லை, மருமகன் செஞ்சா தப்பா?”: ‘ப்யார் பிரேமா கல்யாணம்’  ரிவியூ!

கதைப்படி, சோஷியல் மீடியால ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ் வச்சிருக்க ஒரு மாடர்ன் இன்ஃப்ளூயன்ஸர் தான் நம்ம ஹீரோயின் பவித்ரா (சான்வி மேகனா). இவங்கள உசுருக்கு உசுரா லவ் பண்றார் நம்ம ஹீரோ இளவரசன் என்கிற இளன் (இளன்). ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு பிளான் பண்ணும் போதுதான் ஹீரோயின் ஒரு அதிரடி கண்டிஷன் போடுறாங்க. “என்னால என் வீட்டை விட்டு உங்க வீட்டுக்கு வர முடியாதுப்பா” அப்படின்னு கறாரா சொல்லிடறாங்க. காதலி மேல இருக்குற பைத்தியத்துல நம்ம ஹீரோவும், “சரி, நான் உங்க வீட்டுக்கே வீட்டோடு மாப்பிள்ளையா வந்துடறேன்” அப்படின்னு சொல்லி லக்கேஜோட கிளம்பிப் போயிடுறார்.

ஆரம்பத்துல எல்லாமே ஜாலியா போனாலும், ஹீரோவுக்குச் சரியான வேலை கிடைக்காத போதுதான் அசல் ட்விஸ்ட்டே ஆரம்பிக்குது. வருமானம் இல்லாததால, மாமியார் வீட்டுல சமையல் பண்றதுல இருந்து அத்தனை வீட்டு வேலைகளையும் ஹீரோவே பார்க்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்துல, அந்த குடும்பத்துல இருக்குறவங்க ஹீரோவை ஒரு சாதாரண வேலைக்காரன் மாதிரி நடத்த ஆரம்பிச்சு, எல்லா பொறுப்புகளையும் அவர் தலையிலயே கட்டிடுறாங்க.

தன் மகன் மாமியார் வீட்டுல படுற கஷ்டத்தைப் பார்த்துப் பதறிப்போற ஹீரோவோட அம்மா, அவனை எப்படியாவது அந்த வீட்டுல இருந்து மீட்க ஒரு பக்கா பிளான் போடுறாங்க. “ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்கு வந்து அத்தனை வேலைகளையும் செஞ்சா தப்பில்ல, ஆனா ஒரு பையன் மருமகனா அதைச் செய்யும்போது ஏன் இந்த சமூகம் தப்பா பார்க்குது?” அப்படிங்கிற ஒரு சூப்பரான கேள்வியை இந்தப் படம் கேக்குது. இதனால ரெண்டு குடும்பத்துக்கும் நடுவுல வெடிக்குற ஈகோ மற்றும் கலாச்சார சண்டைகள் என்ன ஆச்சு? காதலர்கள் ஒன்னா சேர்ந்தாங்களா இல்லையா? என்பதை செம்ம கலகலப்பாகவும், எதார்த்தமாகவும் சொல்கிறது இந்த ‘ப்யார் பிரேமா கல்யாணம்’.

இயக்குநராக இருந்த இளன், இத்திரைப்படத்தின் மூலம் முதன்முறையாகக் கதாநாயகனாகப் புரமோஷன் பெற்றுள்ளார். ஒரு எளிய, அப்பாவியான நடுத்தரக் குடும்பத்து இளைஞனாகத் தனது எதார்த்த நடிப்பால் அக்மார்க் சிக்ஸர் அடித்துள்ளார். காதலில் விழுந்து தவிப்பது, வேலை இல்லாமல் சோம்பேறியாக இருப்பது, மாமியார் வீட்டில் அடிமையாகிப் பரிதாபமாகத் தவிப்பது என எல்லா சீன்களிலும் ஒரு தேர்ந்த நடிகராக மிரட்டியுள்ளார். ஹீரோயினாக நடித்துள்ள சான்வி மேகனா, சமகாலத்து மாடர்ன் பெண் கேரக்டருக்குத் தகுந்த துடிப்புடன் நேர்த்தியாகப் பங்களித்துள்ளார். ஒருபுறம் அம்மா, மறுபுறம் புருஷன் என இருவருக்குமிடையே மாட்டிக்கொண்டு அவர் தவிக்கும் காட்சிகள் செம்ம எதார்த்தம்.

இப்படத்தின் மிகப்பெரிய மாஸ் எலிமெண்ட் ‘சந்திரா’ என்ற மாமியார் கேரக்டரில் வரும் மூத்த நடிகை ராதிகா சரத்குமார் தான். அவரோட கம்பீரமான தோற்றமும், ஆளுமையும் அந்தப் பாத்திரத்திற்கு செம்ம வெயிட் சேர்க்குது. ஆரம்பத்துல அன்பாகப் பேசி, சாதுரியமாகத் தனது மருமகனைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப்படுத்தும் அவரது நெகட்டிவ் கலந்த நடிப்பு, திரைக்கதையின் விறுவிறுப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.

மறுபுறம், நாயகனின் அம்மாவாக வரும் கீதா கைலாசம், பாசம் நிறைந்த ஒரு சராசரித் தாயின் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்துள்ளார். படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும், தன் மகனின் மகிழ்ச்சிக்காகவும் நிம்மதிக்காகவும் ஏங்கும் ஒரு எதார்த்தமான தாயாகத் தனது நேர்த்தியான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகிறார். இவர்களுடன், இளனின் கண்டிப்பான தந்தையாக வரும் எம்.எஸ். பாஸ்கர், ஒரு நடுத்தர வர்க்கத் தந்தையின் குணாதிசயங்களையும், அவரது எதிர்பாரப்புகளையும் தனது அக்மார்க் முதிர்ச்சியான நடிப்பால் மிகச் சரியாகத் திரையில் கொண்டு வந்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வயதான தாத்தா கதாபாத்திரத்தில் நகைச்சுவை ஜாம்பவான் செந்தில் வந்து அசத்தியுள்ளார். அவரால் எங்கும் நடக்க முடியாமல் உட்கார்ந்த இடத்திலேயே இருந்தாலும், தனது அசாத்திய உடல்மொழி மற்றும் முகபாவனைகள் மூலம் அனைத்து விதமான முற்போக்குக் கருத்துகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தி கைதட்டல் பெறிறார். நாயகனின் நண்பன் ‘வினோத்’ கதாபாத்திரத்தில் வரும் யோகி பாபு மற்றும் அவரது மனைவி ஜோடி, உண்மையான புரிதல் கொண்ட தம்பதி என்றால் யார் என்பதை நாயகனுக்குத் தங்களது வாழ்க்கை மூலம் புரிய வைக்கிறார்கள். மேலும், இளனின் அண்ணியாக நடித்துள்ள மோகனப்பிரியா இறுதிக்காட்சியில் பேசும் வசனங்கள் மிகவும் அர்த்தமுள்ளவை; அவர் பேசும் கருத்துகளில் சமகாலப் பெண்களின் உண்மையான குரல் எதிரொலிக்கிறது.

ரைஸ்ட் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் நிகழ்விடங்கள் மற்றும் பின்னணிகள் அனைத்தும் இளமைத் தோரணம் கட்டி மிகவும் வண்ணமயமாகக் காட்சி இன்பம் தருகின்றன. அந்த வகையில் ஒளிப்பதிவாளர் தினேஷ் கே பாபுவின் கேமரா ஒட்டுமொத்தப் படத்தையும் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்டியுள்ளது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் வழக்கம் போல இளமைத் துள்ளலோடு ஒலிக்கின்றன. கதையின் எமோஷனல் மற்றும் லவ் சீன்களுக்கு யுவனின் மியூசிக் கூடுதல் ஆன்மாவாக மாறியுள்ளது. இன்றைய காலக்கட்ட ஓடிடி படங்களில் இருக்கும் முகம் சுளிக்க வைக்கும் ஆபாசக் காட்சிகளோ அல்லது இரட்டை அர்த்த வசனங்களோ எதுவும் இல்லாமல், ஒரு தூய்மையான குடும்பப் படமாக இப்படம் உருவாகி இருப்பது குடும்ப ரசிகர்களுக்குப் பெரிய ஆறுதலாக இருக்கிறது. பிரதீப் ஈ. ராகவின் படத்தொகுப்பு இரு குடும்பங்களின் கதையையும் குழப்பமில்லாமல் விறுவிறுப்பாக நகர்த்த உதவியுள்ளது.

‘ப்யார் பிரேமா கல்யாணம்’ வெறும் ஒரு கலகலப்பான காதல் கதையாக மட்டும் நின்றுவிடாமல், சமகாலச் சமுதாயத்தின் நடுத்தரக் குடும்பச் சூழ்நிலைகளையும், ஆணாதிக்கச் சிந்தனைகளையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ள ஒரு நல்லதொரு முற்போக்கான படைப்பாக மாறியுள்ளது. ஆங்காங்கே கதையின் ஓட்டத்தினூடே, போகிற போக்கில் இன்றைய சமுதாயம் சிந்திக்க வேண்டிய கருத்துக்களையும் இயக்குநர் இளன் தூவி விட்டுச் சென்றுள்ளார். அந்த வகையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய எண்டர்டெய்னர் இது!