‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ சிங்க் சவுண்ட் பலவீனமும்… கோட்டை விட்ட கிளைமாக்ஸும்! – விமர்சனம்!

A Bold Psychological Concept Ruined by Sluggish Screenplay Mechanics, Live Sound Flaws, and a Weak Climax!

Yen Ennai Edho Seidhai’ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படத்தின் கதைக்களமானது, பதின் பருவ வயதிலேயே (Teenage) தனது தாயை இழந்து, தந்தையின் பாசமும் அரவணைப்பும் கிடைக்காமல் தடம் மாறும் ஆண்டனி என்ற வாலிபனின் வாழ்வியல் சூழலை விவரிக்கிறது. தனது பால்ய காலத்து நண்பர்களுடன் பொழுதுபோக்கி வரும் அவன், ஒருகட்டத்தில் கடுமையான குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, விலைமாதர்களுடன் நித்தமும் காலத்தைக் கழிக்கிறான். இப்படியான ஒரு இக்கட்டான சூழலில், விலைமாதான மதுமிதா தாஸுடன் அவனுக்கு ஏற்படும் ஒரு நாள் பழக்கம் அவனது சிந்தனையை முற்றிலும் மாற்றுகிறது. மதுமிதாவிடம் இருக்கும் ஏதோ ஒரு உன்னதமான குணம் ஆண்டனியை ஆழமாகக் கவர, அதன் பிறகு மற்ற பெண்களை அவனது மனம் நாட மறுக்கிறது. ஒவ்வொரு நாளும் அவளுடனேயே இருந்து வரும் அவனுக்குள், காலப்போக்கில் மதுமிதா மீது தூய்மையான காதல் பிறக்கிறது.

ஒருகட்டத்தில் அவளையே தனது வாழ்க்கைத் துணையாக மணம் முடிக்கவும் அவன் துணிகிறான். ஆனால், அவனது இந்த முடிவை அவனது பால்ய காலத்து நண்பர்கள்  முரண்பாட்டை ஏற்படுத்துகிறார்கள். தனது நண்பர்களின் எதிர்ப்பையும் தாண்டி, தடம் மாறிய ஆண்டனி மதுமிதாவைத் கரம் பிடித்தானா, அவனது வாழ்க்கை என்னவானது என்ற உணர்வுப்பூர்வமான திருப்பங்களின் பின்னணியிலேயே இத்திரைப்படத்தின் மீதிக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இயக்கி, ‘கார்த்திக்’ எனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துப் படத்தொகுப்புப் (Editing) பணிகளையும் செய்துள்ளார் டி. அந்தோணி. யாராலும் எளிதில் ஏற்றுக்கொள்ளமுடியாத காதலைக் கதைக்கருவாக யோசித்த வகையில் ஈர்த்த அவர், அதனை ஒரு முழுமையான விறுவிறுப்பான திரைக்கதையாக மாற்றுவதில் பெரிதாக யோசிக்கவில்லை என்றே தோன்றுகிறது. படம் முழுக்க எப்போதும் ஒரே மாதிரியான காட்சிகளுடன் ஒரே இடத்திலேயே கதை சுத்திச் சுத்தி வருவது பார்வையாளர்களுக்குப் பெரும் சோர்வைத் தருகிறது. இருப்பினும், இடைவேளைக்குப் பிறகு வரக்கூடிய சில காட்சிகள் ஓரளவிற்குப் பரவாயில்லை என்று சொல்லும் வகையில் நகர்கின்றன.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் டி. அந்தோணி ஒரு சில உணர்ச்சிமிக்க காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும், மற்ற பெரும்பாலான முக்கியக் காட்சிகளில் தனது நடிப்பால் பெரிதாகக் கவரவில்லை. ஆனால், நாயகியாக நடித்திருக்கும் மதுமிதா தாஸ் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார். காதலனை நம்பி ஏமாந்த பெண்ணாக, மகளின் கல்விக்காகப் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஒரு அபலைப்பெண்ணின் வலியைத் தனது எதார்த்தமான நடிப்பால் கண்முன் நிறுத்துகிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி மிகச் சரியாக வசனம் பேசி நடித்திருப்பது சிறப்பு. டி. அந்தோணியின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ரோலை உணர்ந்து நேர்த்தியாக நடித்துக் கவனம் ஈர்க்கின்றனர்.

தொழில்நுட்ப ரீதியாக, இப்படத்தில் டப்பிங் (Dubbing) பேசாமல் ‘சிங்க் சவுண்ட்’ (Sync Sound / Live Sound) முறையில் நேரடியாகக் குரல் ஒலியைப் பதிவு செய்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனமாக அமைந்துள்ளது. பட்ஜெட் போதாக்குறையால் அவசர அவசரமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் இந்த உத்தியால், பல இடங்களில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் தெளிவாகக் கேட்காமல் பார்வையாளர்களைச் சோதிக்கிறது. இப்படத்தின் மற்றொரு பெரும் பலவீனம் அதன் ஒளிப்பதிவு ஆகும். இதில் வரும் கடல் மற்றும் கடற்கரைக் காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அனைத்துக் காட்சிகளுமே தேவையற்ற க்ளோஸ்-அப் (Close-up) ஷாட்களாகவே வைக்கப்பட்டுள்ளதால் காட்சிகளைப் பெரிதாக ரசிக்க முடியவில்லை. மேலும், ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு வண்ணத்தில் இருப்பதோடு, கலர் கிரேடிங் அல்லது டி ஐ (DI) என எதுவுமே செய்யப்படாத ஒரு ‘டபுள் பாசிடிவ்’ படத்தை லேப்பில் பார்ப்பது போன்ற உணர்வையே ஒளிப்பதிவாளர் பியேட்ரோ வில்லானியின் கேமரா கோணங்கள் ஏற்படுத்துகின்றன.

ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் ஆகியோரது இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாகத்தான் இருக்கின்றன. ஜோயி ரெடாவின் பின்னணி இசையும் ஓகே தான். வித்தியாசமான ஒரு காதல் கதையை யோசித்த இயக்குநர் டி. அந்தோணி, முகம் சுழிக்கும் வசனங்களில் அதிகக் கவனம் செலுத்திய அளவுக்குத் திரைக்கதையையும், கிளைமாக்ஸையும் நேர்த்தியாக அமைக்கத் தவறிவிட்டார். பலவீனமான திரைக்கதை, ஒலிப்பதிவு மற்றும் திருப்தியளிக்காத கிளைமாக்ஸ் காரணமாக, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ நிறைவு தரவில்லை!