கருப்பு கோயிலில் கிடா விருந்துடன் முடிந்த ஜீவாவின் ‘தகப்பன்’ படப்பிடிப்பு!
Jiiva's Rural Family Drama 'Thagappan' Shooting Fully Wrapped!
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பசுமைக் கிராமப் பின்னணிகளை மையமாகக் கொண்டு, தந்தை – மகன் உறவை மண்வாசனையுடன் பேசும் இக்குடும்பத் திரைப்படத்தின் படப்பிடிப்பை 45 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், படக்குழுவினரின் அசாத்திய ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே படப்பிடிப்பு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மதுரை, மேலூர் பகுதியில் உள்ள ஆலயத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், அதன் சிறப்பம்சமாகப் படப்பிடிப்பு தொடங்கிய அதே மேலூர் மேலவளவு கருப்பு கோயிலிலேயே படத்தின் இறுதிக்கட்ட இரவு நேரப் படப்பிடிப்புகளும் நிறைவடைந்துள்ளன. இதைக் கொண்டாடும் விதமாகப் படக்குழுவினர் அப்பகுதி மக்களுக்குக் கிடா வெட்டிப் பிரம்மாண்ட அசைவ விருந்து அளித்து மகிழ்ந்துள்ளனர். ‘தெனாவெட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்கக் கிராமத்துப் பின்னணியில் நடிப்பதால் இப்படத்தின் மீது இமாலய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்க, மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார். மேலும் எம். சுகுமார் ஒளிப்பதிவையும், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், கே.பி. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளையும், ஆர். பாலகுமார் நிர்வாகத் தயாரிப்பையும், பிரிதிவிராஜா சின்னசாமி விநியோகத்தையும் முன்னெடுத்துள்ளனர்.
திங்க் மியூசிக் (Think Music) நிறுவனம் இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது. தற்போது போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர் கே. குமார், ‘தகப்பன்’ திரைப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.