‘கிட்டி’  –  விமர்சனம்!

KITTI Tamil Movie Review

ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் திருமாறன் தயாப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம், கிட்டி. எழுதி இயக்கியிருக்கிறார், நெடுமாறன் மோகன்தாஸ். இப்படத்தில் அசோக்,  யுகன், திருமாறன் மோகன்தாஸ், நிஷா இஸ்மத், சங்கவி தர்மராஜ், சிமு அத்வானி, ஒய். ஜி. மகேந்திரன், அரவிந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: ஷேக் காதர், ஒளிப்பதிவு: வெங்கடாசலம் சிங்காரவேலன், படத்தொகுப்பு: கார்த்திபாண்டியன்

நாயகன் அசோக் அவரது காதலியையும், மற்றொருவரையும் கொலை செய்துவிட்டதாக இன்ஸ்பெக்டர் யுகனிடம் வந்து சரணடைகிறார். யுகனின் விசாரணையில் இந்தக்கொலையில் வேறு சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் மீண்டும் தீவிரமான விசாரணையில் இறங்கும் யுகன் குற்றவாளியை தேடிச் செல்கிறார்சதன்பிறகு என்ன நடந்தது? என்பதை விவரிப்பதே கிட்டி திரைப்படத்தின் மீதிக்கதை.

படம் துவங்கிய உடனே, அசோக் காதலியை ஏன் கொலை செய்தார்? என்பதும், அந்தக்கொலை எதற்காக நடந்தது என்பதுமாக காட்சிகள் சுவாரசியமாக செல்கின்றன. அதன் பிறகு சில தொய்வுகள். க்ளைமாக்ஸ் நெருங்கும் போது சில காட்சிகளை யூகிக்கவும், சில காட்சிகளை யூகிக்க முடியாமலும் இருக்கின்றன. இதுவே படத்தின் பலமும், பலவீனமும்.

குழப்பமான மனநிலை கொண்ட கதாபாத்திரத்தில் நாயகன் அசோக் தன்னுடைய திறனை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். நிஷா இஸ்மத், சங்கவி தர்மராஜ், சிமு அத்வானி, ஆகிய மூன்று கதாநாயகிகளும் தங்களால் முடிந்த அளவிற்கு அந்தந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் யுகன், கதாபாத்திரத்திற்கு ஏற்ப  நடித்துள்ளார். நீதிபதியாக ஒய்.ஜி. மகேந்திரன் வழக்கம்போல் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பினை கொடுத்துள்ளார்.

ஷேக் காதரின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை. வெங்கடாசலம் சிங்காரவேலனின் ஒளிப்பதிவும், கார்த்திபாண்டியனின் படத்தொகுப்பும் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருந்தால் இந்தப்படம் இன்னும் சுவாரசியமாக் இருந்திருக்கும்.

படத்தின் முதல் பகுதி கொஞ்சம் சுவாரசியமாக செல்கிறது. இரண்டாவது பகுதியில் பல இடங்களில் தொய்வுகள், நாடகத்தனமான காட்சிகள் ஏராளமாக இருக்கின்றன. அதை தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில்,  சுவாரசியமாக தொடங்கி சுவாரசியமில்லாமல் முடிகிறது, இந்தக் கிட்டி!