‘கோந்தல்’ (விமர்சனம்!) சடங்குகளின் வெளிச்சத்தில் மனித மனங்களின் இருள்!

கடந்த 2025-ஆம் ஆண்டு மராத்தியத் திரையுலகில் வெளியாகி கவனத்தை ஈர்த்த ‘கோந்தல்’ (Gondhal), இப்போது தமிழிலும் அதே பெயரில் தடம் பதித்துள்ளது. மகாராஷ்டிர கிராமங்களில் திருமணத்திற்குப் பிறகு விடிய விடிய நடத்தப்படும் பாரம்பரிய தெய்வ வழிபாட்டுச் சடங்கான ‘கோந்தல்’ நிகழ்வை மையப்புள்ளியாக வைத்து, ஒரே இரவில் நடக்கும்  கிரைம் திரில்லராக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் தேவகர்.

1970-களின் காலகட்டத்தில், மகாராஷ்டிராவின் ஒரு பின்தங்கிய கிராமத்தில் கதை விரிகிறது. விருப்பமில்லாத திருமணத்திற்குப் பிறகு, மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும் ‘கோந்தல்’ சடங்கில் நாயகி இஷிதா தேஷ்முக் மணக்கோலத்தில் அமர்ந்திருக்கிறார். ஊர் தலைவர் தொடங்கி ஒட்டுமொத்த கிராமமும் கூடியிருக்கும் அந்த இரவு நேரக் கொண்டாட்டத்தில், தீப்பந்தங்களின் வெளிச்சத்திற்குப் பின்னால் பலரது மனதிலும் இருண்ட திட்டங்கள் தீட்டப்படுகின்றன. வெள்ளந்தியான குணமும் இரக்கமும் கொண்ட புதுமாப்பிள்ளை யோகேஷ் சோஹோனி, தன் அழகு மனைவியுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கப் பேராவலோடு காத்திருக்கிறார். ஆனால், மணப்பெண் இஷிதாவோ தன் முன்னாள் காதலனுடன் அங்கிருந்து தப்பிச் செல்லத் துடிக்கிறார். இன்னொரு பக்கம், இஷிதாவின் அழகில் மயங்கிய ஊர் தலைவரின் மகன் அவரை அடையத் துடிக்கிறார். இவர்களுக்கெல்லாம் நடுவே, ஊர் தலைவரால் தன் மகனைப் பறிகொடுத்த ஒரு முதியவர், தக்க தருணத்தில் பழிதீர்க்கக் காத்திருக்கிறார். தெய்வத்திற்கான வழிபாடு ஒருபுறம் நடக்க, மறுபுறம் காதல், துரோகம், காமம், அதிகாரப் போட்டி என மனித மனங்களின் அழுக்குகள் மோதத் தொடங்குகின்றன. விடிவதற்குள் அந்த இரவில் நிகழ்ந்த மர்மங்களும், சதிகாரர்களின் திட்டங்களுக்கு நேர்ந்த கதியும் என்ன என்பதே ‘கோந்தல்’ சொல்லும் கதை.

நடிப்பைப் பொறுத்தவரை, அப்பாவித்தனமான முகத்துடன் வலம் வரும் நாயகன் யோகேஷ் சோஹோனி படத்தின் மிகப்பெரிய ஆச்சரியம். தன் மனைவியைப் பற்றி மற்றவர்கள் பேசும் இரட்டை அர்த்தப் பேச்சுகளைக் கூடப் புரிந்துகொள்ளாமல் அனைவரிடமும் அன்பு காட்டும் அவர், கதையின் இறுதிக்கட்டத்தில் எடுக்கும் விஸ்வரூபம் பிரமிக்க வைக்கிறது. வார்த்தைகளால் அல்லாமல் கண்களாலேயே தன் கோபத்தை அவர் வெளிப்படுத்தும் காட்சி, அதுவரை படத்தில் ஸ்கோர் செய்த அத்தனை நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளி அரங்கின் கைதட்டல்களை அள்ளுகிறது. ஊரே வியக்கும் பேரழகியாக வரும் இஷிதா தேஷ்முக், தன் திமிரான உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். தன்னைச் சுற்றி வரும் ஆண்களின் ஏக்கத்தைக் கிண்டலாகக் கையாள்வதும், காதலனுக்காகக் கணவனுக்குத் துரோகம் இழைக்கத் துணிவதுமாகத் தன் நடிப்பில் அழுத்தமான முத்திரை பதிக்கிறார். தெருக்கூத்து கலைக்குழுவின் மூத்தவரான பிவாபா கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிஷோர் கடம், தன் பழிவாங்கும் உணர்ச்சியை உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டு, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற பதற்றத்தைப் படம் முழுக்கக் கடத்துகிறார். ஊர் தலைவராக சுரேஷ் விஸ்வகர்மா, அவரது மகனாக நிஷாத் போஹிர், நாயகியின் காதலனாக அஞ்சு பிரபு என அனைவரும் நடிப்பதைத் தாண்டி அந்தக் கிராமத்து மண்ணின் மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு இப்படத்தை வேறொரு தளத்திற்குக் கொண்டு செல்கிறது. செயற்கை வெளிச்சம் இல்லாத 1970-களின் இரவு நேரத்தை, வெறும் தீப்பந்தங்கள் மற்றும் பூஜை விளக்குகளின் ஒளியில் மிக யதார்த்தமாகப் படம்பிடித்துள்ள ஒளிப்பதிவாளர் அமலேந்து சௌத்ரி திரையில் பெரும் மாயாஜாலம் நிகழ்த்தியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் இசை இப்படத்தின் ஆன்மாவாக ஒலிக்கிறது. மராட்டிய கிராமத்து சடங்குப் பாடல்களோடும் தெருக்கூத்து வாத்தியங்களோடும் பார்வையாளர்களை அந்தக் கொண்டாட்டத்திற்குள் அழைத்துச் செல்லும் அவர், ஒரு உணர்வுப்பூர்வமான மெலடி பாடல் மூலம் நெஞ்சை வருடுகிறார். மெதுவாக நகரும் காட்சிகள், நீளமான ‘சிங்கிள் ஷாட்’ காட்சிகள் மற்றும் அதிக வசனங்கள் கொண்ட திரைக்கதை சற்றும் சலிப்புத் தட்டாமல் பார்வையாளர்களைக் கட்டிப்போட படத்தொகுப்பாளர் ஆஷிஷ் மாட்ரேவின் கச்சிதமான உழைப்பு பெரிதும் கைகொடுத்துள்ளது.

ஒரு பண்பாட்டுச் சடங்கின் பின்னணியில், மனிதர்களின் உளவியல் போராட்டங்களை இணைத்து அழுத்தமான கிரைம் திரில்லரைக் கொடுத்துள்ளார் இயக்குநர் சந்தோஷ் தேவகர். நமக்குப் பரிச்சயமில்லாத முகங்கள் நடித்திருந்தாலும், இது ஒரு டப்பிங் படம் என்ற உணர்வே எழாத அளவிற்குத் தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களின் கவனத்தைத் திரையோடு கட்டிப்போடுகிறது திரைக்கதை. மொழி எல்லைகளைக் கடந்து நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகர்களுக்கு, இந்த ‘கோந்தல்’ ஒரு மறக்க முடியாத திரையனுபவமாக அமையும்.