மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’!

‘Theeraganam’ from Mithun Manickam’s ‘Family Boy’ Out Now!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகரும் இயக்குநருமான மித்துன் மாணிக்கம் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் ‘ஃபேமிலி பாய்’ (Family Boy). உண்மைச் சம்பவத்தைத் தழுவி ஃபேமிலி டிராமா மற்றும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ‘தீராகணம்..’ எனும் முதல் பாடலும், அதன் லிரிக்கல் வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

“அணுவும் அண்டமும்… அவளும் யானும்… அனைத்தும் காதலே… அவள் என் தீராகணமே…” என்ற அழகான கவிதை வரிகளுடன் தொடங்கும் இப்பாடல், இயக்குநர் மித்துன் மாணிக்கத்தின் எழுத்தாற்றலைப் பறைசாற்றுகிறது. நிர்மல் JP இசையமைப்பில், இயக்குநர் மித்துன் மாணிக்கம் எழுதியுள்ள இப்பாடலை ஆதித்யா RK, மால்வி சுந்தரேசன் மற்றும் அபர்ணா நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இனிமையான காதல் மெலோடியாக உருவாகியுள்ள இப்பாடல் இளைய தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் மித்துன் மாணிக்கத்துடன் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்ய, ஜிஜேந்திரன் V படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.

மெக்கானிக் பிக்சர்ஸ் சார்பில் மித்துன் மாணிக்கமும், மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP சார்பில் முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோரும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடும் ‘ஃபேமிலி பாய்’ திரைப்படம், வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.