புத்தாண்டு விருந்தாகத் திரைக்கு வரும் விஜய் படம்!

Vijay's Bairavaa Re-Release Date Announced!

பி. நாகிரெட்டியாரின் பாரம்பரியமிக்க விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பைரவா’. தற்போது 2027-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 1-ம் தேதி இப்படத்தை உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’, ‘மதுர’, ‘வீரம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியவரும், விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியவருமான பரதன், இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்த படம் இதுவாகும். இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வில்லனாக ஜெகபதி பாபுவும், முக்கியக் கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, மைம் கோபி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான ‘பட்டைய கெளப்பு’, ‘நிலாயோ’, ‘பா பா’, மற்றும் ‘வர்லாம் வர்லாம் வா பைரவா’ ஆகிய பாடல்கள் பத்து ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் ரசிகர்களின் விருப்பமான பாடல்களாக வலம் வருகின்றன.

2017-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வந்த ‘பைரவா’, வெளியான 5 முதல் 6 நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலைக் கடந்து விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. திரையரங்குகளைத் தாண்டி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போதெல்லாம் இப்படத்திற்குக் கிடைக்கும் அதிகப்படியான டிஆர்பி (TRP) எண்ணிக்கையே, இப்படத்தின் மீதான ரசிகர்களின் தீராத வரவேற்புக்குச் சான்றாக உள்ளது.

2017-ம் ஆண்டு ‘பைரவா’ வெளியானபோது சிறுவர்களாக இருந்த விஜய் ரசிகர்கள், தற்போது வளர்ந்து இளைஞர்களாகியுள்ளனர். தங்களுக்குப் பிடித்தமான படத்தை மீண்டும் பெரிய திரையில் கொண்டாடவும், அப்போது திரையரங்குகளில் பார்க்கத் தவறியவர்களுக்கு ஒரு புதிய திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கவும் இந்த 2027 புத்தாண்டு மறுவெளியீடு ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.