இம்ரான் ஹாஷ்மியின் புதிய ஹாரர் படம் ‘ரூஹ்’!

ROOH Movie Announcement: Kumar Taurani and Emraan Hashmi Join Forces for 2027 Musical Horror Film

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் குமார் தௌரானி, நடிகர் இம்ரான் ஹாஷ்மியுடன் இணைந்து ‘ரூஹ்’ (ROOH) என்ற இசையை மையமாகக் கொண்ட புதிய ஹாரர் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். காதல், மர்மம் மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாகும் இப்படத்தை மயங்க் ஷர்மா இயக்குகிறார். விஷால் கபூர் மற்றும் மயங்க் ஷர்மா இணைந்து இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர். ஹாரர் மற்றும் காதல் ஆகிய இரு அம்சங்களையும் இசையுடன் இணைத்து, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகும் ‘ரூஹ்’ திரைப்படம், 2027-ம் ஆண்டு இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தி திரையுலகில் மறக்க முடியாத பல ஹாரர் திரைப்படங்களில் நடித்துள்ள இம்ரான் ஹாஷ்மி, மீண்டும் தனது பலமான ஹாரர் களத்திற்குத் திரும்பியுள்ளார். காதல், பிரிவு மற்றும் ஏக்கம் எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திரைப்படப் பாடல்கள் ஒரு தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. அந்த இசைப் பாரம்பரியத்தையும், குமார் தௌரானியின் இசை அனுபவத்தையும், டிப்ஸ் ஃபிலிம்ஸின் தயாரிப்புத் திறனையும் ஒன்றிணைக்கும் வகையில் இப்படம் உருவாகிறது.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் குமார் தௌரானி கூறுகையில்,

“இம்ரானுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு மிகவும் சிறப்பான தருணம். ஏனெனில், அவர் அறிமுகமான ‘ஃபுட்பாத்’ திரைப்படத்தையும் நாங்கள்தான் தயாரித்திருந்தோம். கடந்த பல ஆண்டுகளாகப் பல திரைப்படங்களில் இணைந்து மறக்க முடியாத வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம். தற்போது ‘ரூஹ்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் அந்த வெற்றி மாயாஜாலத்தை உருவாக்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது. சன்னி கன்னா மற்றும் விக்ரம் கக்கருடன் இணைந்து பணியாற்றுவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

விக்ட் ஃபிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் விக்ரம் கக்கர் பேசுகையில்,

“‘ரூஹ்’ திரைப்படம் எங்களுக்கு மிகவும் சிறப்பான ஒரு படைப்பு. டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் எங்களுடன் இணைந்திருப்பது ஒரு முக்கியமான மைல்கல். 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் ரசிகர்களுக்கு மறக்க முடியாத, பிரம்மாண்டமான ஹாரர் திரைப்பட அனுபவத்தை வழங்க ஆவலுடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். மற்றொரு தயாரிப்பாளரான சன்னி கன்னா கூறுகையில், “குமார் தௌரானி மற்றும் கிரிஷ் குமார் ஆகியோர் இப்படத்தில் எங்களுடன் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இசை முக்கியப் பங்கு வகிக்கும் இப்படத்தை இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் இருக்கிறோம்” என்றார்.

தனது கதாபாத்திரம் மற்றும் இசை குறித்துப் பேசிய நடிகர் இம்ரான் ஹாஷ்மி,

“இந்தப் படத்தில் குமார் ஜியுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வாகவே கருதுகிறேன். எனது திரைப்படங்களுடன் ரசிகர்கள் உணர்வுபூர்வமாக இணைவதில் இசை எப்போதுமே முக்கியப் பங்கு வகித்துள்ளது. ‘ரூஹ்’ திரைப்படத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் வகையில், காதல், மர்மம் மற்றும் ஆழமான உணர்வுகள் நிறைந்த இசையை உருவாக்க விரும்புகிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார். டிப்ஸ் ஃபிலிம்ஸ் வழங்க, விக்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை குமார் தௌரானி, கிரிஷ் குமார், விக்ரம் கக்கர் மற்றும் சன்னி கன்னா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். விகாஸ் சாஹ்னி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்ற, டிப்ஸ் மியூசிக் நிறுவனம் இப்படத்தின் இசையை வெளியிடுகிறது.