ஊர்வசியின் சகோதரி கலாரஞ்சினி நடிப்பில் உருவாகும் புதிய ஹாரர் படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’!

Debutant Abhay Sankar Directs Bilingual Horror Comedy Starring Shraddha Gokul

ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில், திகிலூட்டும் ஹாரர் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் காதல் எனப் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைக் கலந்து வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இருண்ட பின்னணியில் மர்மமான கட்டிடத்தின் சூழலில், அச்சத்துடன் மேலே நோக்கும் தாயும் மகனும் இடம்பெற்றுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கேரளாவிலிருந்து தனது தாயுடன் சென்னைக்கு வரும் நடுத்தர வயது நபர் ஒருவர், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் புதிய வீட்டில் குடியேறுகிறார். அதன்பின் அங்கு நிகழும் மர்மமான மற்றும் அமானுஷ்ய சம்பவங்கள் அவர்களது வாழ்க்கையை எப்படி அச்சத்தில் ஆழ்த்துகின்றன என்பதே இப்படத்தின் விறுவிறுப்பான கதைக்களமாகும்.

இப்படத்தில் கலேஷ் ராமானந்த் கதாநாயகனாகவும், ஷ்ரத்தா கோகுல் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மூத்த நடிகை ஊர்வசியின் சகோதரியான நடிகை கலாரஞ்சினி, கதாநாயகனின் தாயாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ரமேஷ் திலக், தலைவாசல் விஜய், சார்மிளா, டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன், கும்கி அஸ்வின், டாக்டர் அமர் ராமச்சந்திரன், பிரதிபா பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீஜித் எடவானா இசை மற்றும் பின்னணி இசையைக் கவனிக்க, பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவையும், ஐயப்பன் நாயர் எம்.எஸ். படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர். மேலும், புராஜெக்ட் டிசைனராக ஜாக்கி ஜான்சன், விஎஃப்எக்ஸ் தீபு சந்திரன், ஒலி வடிவமைப்பு சி.எம். சாதிக், ஒலி எடிட்டிங் சரண் விநாயக், கலை இயக்குநர் எஸ்.பி. நாகராஜ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப், வினீத் ஸ்ரீனிவாசன், அனிலா ராஜீவ் ஆகியோர் பாடியுள்ள இப்படத்தின் பாடல்களை நவீன் கண்ணன், பீம் ஜி, நவீன் மாரார், ரஞ்சித் ஆகியோர் எழுதியுள்ளனர். சென்னை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்து வரும் 2027 ஜனவரி மாதம் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.