‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் ‘அறிவு’ படத்திற்குச் சர்வதேச அங்கீகாரம்!

Imman Musical Starring Vijay Kumar and Anandhi Releasing on December 11

மூவிட்ரான் புரொடக்ஷன் (Movietron Production) தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI 2026), இந்தியன் பனோரமா ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், உலக அளவில் கவனம் பெறும் இத்திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ள தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘அறிவு’ பெற்றுள்ளது.

சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், ‘கழுகு’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ‘உறியடி’ விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண் உரிமைகள் மற்றும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, வலுவான சமூகச் செய்தியை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்லும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக சாய்பிரபு ஜெயக்குமார் செயல்படுகிறார்.

இப்படத்தில் ஐ.எம். விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தில் ராஜு ஒளிப்பதிவும், வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். மேலும், கலை இயக்குநராக எஸ்.கே., தயாரிப்பு மேற்பார்வையாளராக ராமு எம்., நிர்வாகத் தயாரிப்பாளராக அரவிந்த், தயாரிப்பு நிர்வாகியாக தென்னரசு ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியிருப்பது இப்படத்திற்குக் கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மேலும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் படத்தை அனுப்பப் படக்குழு திட்டமிட்டுள்ளது. உலகத் திரைப்பட அரங்கில் கிடைத்துள்ள இந்தப் பெருமையுடன், ‘அறிவு’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.