ஓவியா நடிக்கும் புதிய ஜென்-சி திரைப்படம் ‘கிளிக்’!
Oviya and Rajaprabu Lead Youthful Suspense Film ‘Click’, Directed by Sundar Mahashree
ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் (JRP International Cine Arts) நிறுவனம் சார்பில் ராஜாபிரபு தயாரித்து, சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘கிளிக்’ (Click). இதில் நடிகை ஓவியா மற்றும் தயாரிப்பாளர் ராஜாபிரபு ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தைத் தயாரிப்பதுடன், ராஜாபிரபுவே கதாநாயகனாகவும் களமிறங்கியுள்ளார்.
துள்ளலான இளமை, சஸ்பென்ஸ் மற்றும் சுவாரசியமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு புதுமையான கதையாக, இன்றைய தலைமுறையினருடன் எளிதில் ஒன்றிப்போகும் வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக, ஜென் சி (Gen-Z) கதைக்களத்துடனும், விறுவிறுப்பான திரைக்கதையுடனும் தயாராகியுள்ள ‘கிளிக்’, இன்றைய உறவுகளின் உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளின் எதிர்பாராத திருப்புமுனைகளை அழகாக வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான கலகலப்பான திரையரங்க அனுபவத்தை வழங்கவுள்ளது.
இப்படத்தில் ஓவியா, ராஜாபிரபு ஆகியோருடன் இயக்குநர் சுந்தர் மஹாஸ்ரீ, அஸ்மிதா, அமுதவாணன், ‘லொள்ளு சபா’ மனோகர், சல்மா பைரோஸ், அருள் செல்வம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜோசப் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அருண் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சையத் ஜாஃபர் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். விறுவிறுப்பாகத் தயாராகியுள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.