‘ஜெடூசி’ – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சமூகப் பொறுப்புணர்வையும் இணைத்துச் சொல்லும் படைப்புகளுக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. அந்த வரிசையில், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களையும், அதற்கான எதிர்வினைகளையும் ஒரு விறுவிறுப்பான புலனாய்வுத் திரில்லர் வடிவில் தந்திருக்கிறார் இயக்குநர் நட்ராஜ் ஏகாம்பரம். அக்ஷயா மூவி மேக்கர்ஸ் மற்றும் ஸ்ரீ இன்டர்நேஷனல் மூவிஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு விக்னேஸ்வரன் பழனிவேல் இசையமைத்துள்ளார்.

கணினி மற்றும் கண்காணிப்பு கேமராக்களைப் பழுதுபார்க்கும் தொழில் செய்பவர் கதையின் நாயகன் சேரமணி ஸ்ரீதர். தனது நண்பர் பிளாக் பாண்டியுடன் இணைந்து சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் மர்மமான முறையில் கடத்தப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, அக்கல்லூரியின் முதல்வர் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதோடு, அந்தப் பழி கல்லூரியின் பேராசிரியை ஒருவர் மீது விழுந்து அவர் தற்கொலை செய்து கொள்ளும் சூழலும் ஏற்படுகிறது. ஒரே கல்லூரியை இலக்காகக் கொண்டு அடுத்தடுத்து அரங்கேறும் இந்தப் பாதகச் செயல்களின் பின்னணியில் இருப்பவர் யார் என்பதைக் கண்டறியக் காவல்துறை ஒருபுறம் களமிறங்குகிறது. மறுபுறம், கல்லூரியின் நிறுவனரான ஏ. வெங்கடேஷும் உண்மையைத் தேடிப் பயணிக்கிறார். இந்தக் குற்றங்களுக்கும் நாயகனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா, குற்றவாளியின் நோக்கம் என்ன என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது திரைக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சேரமணி ஸ்ரீதர், பழங்குடியின இளைஞராகவும், தொழில்நுட்ப வல்லுநராகவும் இருவேறு பரிமாணங்களில் கச்சிதமாகப் பொருந்துகிறார். காதல் மற்றும் சண்டைக் காட்சிகளில் துடிப்புடன் செயல்பட்டிருப்பவர், உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சுவேதா ஸ்ரீம்ப்டன், பழங்குடியினப் பெண்ணின் வாழ்வியலையும், இக்கட்டான சூழலில் சிக்கிய பெண்ணின் மனவலியையும் மிக இயல்பாகத் திரையில் பிரதிபலித்துப் பாராட்டுப் பெறுகிறார். மற்றொரு நாயகியான சினி யுதன், கதையின் திருப்பத்திற்குக் காரணமாக அமையும் பாத்திரத்தில் அளவான நடிப்பை வழங்கியுள்ளார். நகைச்சுவைக்கு மட்டுமல்லாமல், கதையின் நகர்வுக்குத் துணைநிற்கும் குணச்சித்திர வேடத்திலும் பிளாக் பாண்டி சிறப்பாகப் பங்களித்துள்ளார். மேலும், நாயகியின் பெற்றோராக வரும் பாவா செல்லதுரை, ஜெயந்திமாலா, கல்லூரி நிறுவனராக நடித்திருக்கும் ஏ. வெங்கடேஷ், காவல்துறை அதிகாரி அருவி மதன், கல்லூரி முதல்வர் அசோக் பாண்டியன் ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையையும் மிக ஆழமாகவும் உணர்ச்சிகரமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நட்ராஜ் ஏகாம்பரம். தவறு செய்பவர்கள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாகத் தப்பித்தாலும், இயற்கையும் காலமும் அவர்களுக்கான தண்டனையை நிச்சயம் வழங்கும் என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக, படத்தின் தலைப்பான ‘ஜெடூசி’ என்ற பொருளை வெறும் குறியீடாக மட்டும் வைக்காமல், கதையின் போக்கைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியக் கதாபாத்திரமாகவே வடிவமைத்து, உச்சக்கட்டக் காட்சியில் அதைப் பயன்படுத்தியிருக்கும் விதம் இயக்குநரின் புத்திசாலித்தனத்திற்குச் சான்று.

மொத்தத்தில், சில இடங்களில் வழக்கமான சினிமா பாணி தென்பட்டாலும், அழுத்தமான சமூகக் கருத்தையும், விறுவிறுப்பான மர்ம முடிச்சுகளையும் கொண்ட ‘ஜெடூசி’, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நேர்த்தியான படைப்பாக அமைந்துள்ளது.