உணவுப் பொட்டலங்களைச் சுமந்து கொண்டு நகரத்தின் வீதிகளில் ஓடும் ஒரு சாதாரண டெலிவரி பாய், எதிர்பாராத விதமாக ஒரு கொலைப் பின்னணியில் சிக்கிக் கொண்டால் என்னவாகும்? தாய்ப்பாசத்திற்கும், குற்ற உணர்ச்சிக்கும் இடையே நடக்கும் இந்தப் பரபரப்பான ஆக்ஷன் போராட்டமே ‘டெலிவரி பாய்’. நானி தர்லா இயக்கத்தில், லியோ சிவகுமார், ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம், ஆரம்பம் முதலே விறுவிறுப்பைக் கூட்டுகிறது.

கையில் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவு, குடும்பச் சூழலால் கழுத்தில் டெலிவரி பேக் – இதுதான் நாயகன் லியோ சிவகுமாரின் வாழ்க்கை. தன் தாய் ராதிகா சரத்குமார் மீது உயிரையே வைத்திருக்கும் இவருக்கு, தாய்க்கு ஏற்படும் ஒரு விபத்து பேரிடியாக விழுகிறது. உயிரைக் காப்பாற்றப் பெரும் பணம் தேவைப்பட, வேறு வழியின்றித் தவறான ஒரு வழியில் இறங்குகிறார். அந்த ஒரு முடிவு அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. சில மாதங்களுக்குப் பிறகு, தான் செய்த செயலால் ஒரு நிரபராதி கொலைக் குற்றத்தில் சிக்கித் தவிப்பதை அறியும் நாயகன், குற்ற உணர்ச்சியால் துடிக்கிறார். அந்த நிரபராதியை ஆபத்திலிருந்து மீட்க அவர் எடுக்கும் அதிரடி அவதாரமே திரைக்கதை.

படத்தின் மொத்த பலமும் நாயகன் லியோ சிவகுமார்தான். ஆள் அடையாளமே தெரியாத அளவிற்குப் புதிய பொலிவுடனும், கடின உழைப்புடனும் திரையில் ஜொலிக்கிறார். காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என எல்லா ஏரியாவிலும் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்து, ‘நானும் ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோதான்’ என அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். ராதிகா சரத்குமார் தன் இயல்பான நடிப்பால் மனதைத் தொடுகிறார். நாயகி பிரிகிடா சாகா முதல் பாதியில் மட்டும் வந்து போகிறார்; கதையில் அவருக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்யந்த், உதயா தீப் ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பால் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளனர். கொடூர வில்லன்களாக வரும் ஏழு இளைஞர்கள் பழைய சினிமா வில்லன்களை நினைவூட்டினாலும், மிரட்டலாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர்கள் அசோக்குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ். குமாரின் கேமரா, சேசிங் மற்றும் சண்டைக் காட்சிகளில் அனல் பறக்க விட்டுள்ளது; பாடல் காட்சிகளையும் கண்களுக்குக் குளிர்ச்சியாகப் படமாக்கியுள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்குப் பெரிய பூஸ்ட்.

தன்னைப் பாதித்த ஒரு கதையை எடுத்துக்கொண்டு, அதை இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் புத்திசாலித்தனமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் நானி தர்லா. கமர்ஷியல் அம்சங்களை அளவாகக் கையாண்டு, தொய்வில்லாத திரைக்கதையோடு ஒரு முழுமையான ஆக்ஷன் பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநரைத் தாராளமாகப் பாராட்டலாம்!