ஆதார் – விமர்சனம்!

பிறந்த சில நாட்களே ஆன, கதறியழும் பச்சிளங் குழந்தையுடன் ‘அம்மா.. என் பொண்டாட்டியை காணாம்மா.. கண்டுபிடிச்சு குடுங்கம்மா…’ என, கண்ணீர் மல்க ஸ்டேஷனில் இருக்கும் பெண் போலீஸிடம் முறையிடுகிறார் கருணாஸ். இந்த பதறவைக்கும் காட்சியை அடுத்து ஒரு நெகிழ வைக்கும் காட்சி. பசியால் துடிக்கும் அந்த குழந்தையை அரவணைத்து பசியாற்றுகிறார், அந்த பெண் போலீஸ்!

இதையடுத்து,  வெளியே சென்றுவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும், ‘ஏட்டு’ அருண் பாண்டியனிடம் கருணாஸ் முறையிடுகிறார். கருணையுடன் விசாரிக்கும் அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை அனுப்பி வைக்கிறார். ஆனால் கூறியபடி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக உணரும், கருணாஸுக்கு உதவும் பொருட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் இருக்கும் கடைக்காரர் ஒருவர், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கருணாஸின் பிரச்சனையை கொண்டு செல்கிறார். இதனால் கோபமடையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘பாகுபலி’ பிரபாகர், போலீஸுக்கே உரித்தான வழக்கப்படி கருணாஸை கவனித்து விட்டு, கருணாஸின் மனைவிக்கு இன்னொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனக்கூறி அவரது கேஸை முடித்து வைக்கின்றனர்.

கருணாஸ் அதை நம்ப மறுக்கிறார். அப்படி என்றால், போலீஸ் பொய் சொல்கிறதா? உண்மை என்ன? என்பது தான், ‘ஆதார்’ படத்தின் மொத்தக் கதையும்.

கதாபாத்திரங்களுக்கேற்ற நடிகர்களின் தேர்வு கச்சிதமாக இருக்கிறது. இதனால், படம் பார்ப்பவர்களின் கவனம் சிதறாமல் இருக்கிறது. மேலும் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாரின் திரைக்கதைக்கு அது பலமும் சேர்த்துள்ளது.

கட்டிடத்தொழிலாளியாக நடித்துள்ள கருணாஸ், முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, படம் பார்ப்பவர்களை உருக்குகிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் ரித்விகாவும் நிறைவான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களில் இரும்பு கம்பிகளை திருடும் பெண்ணாக இனியா, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருக்கிறார். சில காட்சிகள் தான் என்றாலும் மனதில் நின்றுவிடுகிறார். போலீசாருக்கும் இவருக்கும் நடக்கும் சண்டைக்காட்சியின் நீளம் வெட்டப்பட்டிருப்பதை போன்ற உணர்வு ஏற்படுகிறது.

உயர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் உமா ரியாஸ்கான், இன்ஸ்பெக்ட்ராக நடித்திருக்கும் பாகுபலி பிரபாகர், போலீஸ் ஏட்டாக நடித்திருக்கும் அருண்பாண்டியன், கட்டிட மேஸ்திரி பி.எல்.தேனப்பன், இன்ஸ்பெக்டராக வரும் பாகுபலி பிரபாகர் உள்ளிட்டோர் காட்சிகளுக்கேற்ற நடிப்பினை கொடுத்துள்ளனர்.

படம் ஆரம்பித்தவுடன் மிரட்சியும், நெகிழ்ச்சியுமாக மெதுவாக நகர ஆரம்பிக்கும் திரைக்கதை, படிப்படியாக வேகமெடுக்கிறது. க்ளைமாக்ஸை நெருங்கும் போது ஒவ்வொருவருக்கும் திகிலும், பயமும் ஒருசேர ஏற்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக ரித்விகாவின் நிலை பற்றிய மர்ம முடிச்சுக்கள் அவிழும் போது திரைக்கதை சபாஷ் போடவைக்கிறது.

ஆனால் அதே திரைக்கதையில் ஒரு சில நொடிகளில் இடம் பெறும் ‘செய்தித் தாளின்’ போஸ்டர் ஒட்டுமொத்த திரைக்கதையையும் கேலிக்கூத்தாக்கியிருக்கிறது. எடிட்டராவது அந்த சில நொடிக் காட்சிகளை ‘எடிட்’ செய்திருந்தால் கதை, திரைக்கதை படுகுழிக்குள் சமாதியானதை தடுத்திருக்கலாம்!

கிளைமாக்ஸில் நடந்தது, கொலையா? தற்கொலையா? என, ஒரு சிலருக்கு சந்தேகம் ஏற்படலாம்! அதையும் சற்று தெளிவாக படமாக்கியிருக்கலாம். ஆனால் சிலரால் அது போலீஸ் சிஸ்டத்திற்கு பலியான, அப்பாவி போலீஸ் என உறுதி செய்து கொள்ள முடிகிறது.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும், ஸ்ரீ காந்த் தேவாவின் பின்னணி இசையும் படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது.

‘ஆதார்’, க்ரைம் த்ரில்லர் வகைப் படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!