அங்கீகாரம் திரைப்படத்தில் தயாரிப்பாளர் கே.ஜெ.ஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் விஜி வெங்கடேஷ் , இசபெல்லா, வசுந்தரா,சிந்தூரி , அஜித் கோஷி, ரமா, ரங்கராஜ் பாண்டே , மோகன்ராம், மன்சூர் அலிகான், செல்வி, ஜானகி, ராம்ஜி, அருள் டி. சங்கர், விமல்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத் திரைப்படத்தினை எஸ்.கே.பிரசாந்த், அஜித் பாஸ்கர், அருண் முருகன் தயாரித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார் தென்பாதியான். ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
துப்புரவு தொழிலாளியான ரமாவின் மகன், கேஜெஆர். தந்தையை இழந்த அவர், தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்துவருகிறார். விளையாட்டில் ஆர்வமுள்ள அவர் ஓட்டப்பந்தயத்தில் தனிக்கவனம் செய்து வருவதுடன், நேஷனல் லெவெலில் பல மெடல்களை குவித்து சாதனை படைக்கிறார். இவரது கனவு காமன் வெல்த் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெறுவது தான். அதற்காக தன்னை கடுமையாக தயார் படுத்தி வருகிறார். இவருக்கு பயிற்சி அளித்துவரும் சங்கம் இவரை போட்டியில் பங்கு பெற விடாமல் தடுக்கிறது. எவ்வளவோ மன்றாடியும் இவரை சங்கம் புறந்தள்ளுகிறது. இதனால், கே.ஜெ.ஆர்., காமன் வெல்த் போட்டிக்கு தடைகேட்டு கோர்ட்டுக்கு போகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘அங்கீகாரம்’.
நாயகனாக நடித்திருக்கும் கே.ஜெ.ஆர், விளையாட்டு வீரருக்கான அத்தனை தகுதிகளுடன் திரையை ஆக்கிரமிக்கிறார். ஒரு ஓட்டப்பந்தய வீரர் எப்படி நடந்து கொள்வாரோ, அதை அப்படியே பிரதிபலிக்கிறார். தாயின் கஷ்டத்தை நினைத்து கவலைப்படும் போதும், தங்கையுடன் பாசத்துடன் பழகும் போது சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார். இசபெல்லா, வசுந்தரா, ரமா, சிந்தூரி, ஷான், அருள் டி.சங்கர், மன்சூர் அலிகான், ரங்கராஜ் பாண்டே, மோகன் ராமன் உள்ளிட்டோரும் கதைக்கு ஏற்றபடி நடித்துள்ளனர். திரைக்கதையை நகர்த்துவதிலும் சரியான பங்களிப்பினை கொடுத்துள்ளனர்.
ஓட்டப்பந்தயம் குறித்த நுனுக்கங்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். கே.ஜெ.ஆர் ஓடக்கூடாது என்பதற்காக ஸ்டேஷனில் அவருக்கு கொடுக்கும் தண்டனை கவனிக்கத்தக்கது. அதாவது ஸ்குவாட் பொஷிஷனில் தொடர்ச்சியாக இருக்கும் போது, பின்னந்தொடை உள்ளிட்ட தசை நார்கள் கிழியும். அதனால் அடுத்த நாள் ஓட முடியாது. இப்படி சில விஷயங்களை சொல்லி படத்தை விளையாட்டு சார்ந்து காட்சிப்படுத்தியுள்ளனர். அதோடு இந்தியாவின் தேசிய விளையாட்டு எது என்பது குறித்த காட்சிகளும் ரசிக்கத்தக்கது.
ஒளிப்பதிவினை, ஒளிப்பதிவாளர் ஏ. விஸ்வநாத் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். ஜிப்ரான் வைபோதா பின்னணி இசை, பலம் சேர்த்திருக்கிறது.
நீதிமன்ற வாத, பிரதிவாதங்கள் சினிமாத்தனமாக படமாக்கப்பட்டிருப்பது தான் படத்தின் குறை. எழுதி இயக்கியிருக்கும் தென்பாதியான், இந்திய அளவில் விளையாட்டுத்துறையில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தி பதக்கங்கள் ஏன் கிடைக்கவில்லை என்பதற்கான காரணத்தையும் உரக்கச்சொல்லி இருக்கிறார்.
‘அங்கீகாரம்’ விளையாட்டுத்துறையில் நடக்கும் ஊழல்!