‘கான் சிட்டி’ – விமர்சனம்!

அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன், நந்தகோபால், VTV கணேஷ், தீபா ராமானுஜம், ராதா ரவி , அருள் தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக் , பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ராகு எசக்கி , சதானந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹரிஷ் துரைராஜ் தயாரித்து, எழுதி இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்க, ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அரவிந்த் விஸ்வநாதன்.

அன்ன பென் தன் மகனின் எதிர்காலத்திற்காக பலரை மோசடி செய்து அந்த பணத்தை இரட்டிப்பு செய்வதற்காக அர்ஜூன் தாஸிடம் கொடுக்கிறார். யோகிபாபுவின் அம்மாவும் மோசடியாக சம்பாதித்த பணத்தை அர்ஜுன்தாஸிடம் கொடுக்கிறார். அர்ஜுன் தாஸ் இப்படி பலரிடம் பணம் வாங்கி அதை பங்குசந்தையிலும், கடத்தல் தொழிலிலும் முதலீடு செய்கிறார். கடத்தல் தொழில் செய்த நபர் கொலை செய்யப்படுகிறார். பணத்தை வாங்கியபவர்களிடம் திருப்பி கொடுக்க முடியாமல் போகிறது. சுமார் 100 கோடி அளவில் பணம் ஏமாற்றப்பட்டதால் அர்ஜுன் தாஸ், அன்ன பென், வடிவுக்கரசி, யோகிபாபு ஆகியோர் தலைமறைவாக இருந்த நிலையில் அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்கிறார். பின்னர் அவர்களை பிளாக் மெயில் செய்து ஒரு பெரிய மோசடியில் ஈடுபடுத்துகிறார். அதன் பிறகு என்ன ஆனது என்பதே கான் சிட்டி படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். இதுவரை வில்லனாக, இறுக்கமான கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த இவர் சற்றே அதிலிருந்து மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் ரசிகர்களை ஈர்க்கிறார். தான் ஏமாற்றப்பட்டதை போலவே, மற்றவர்களை ஏமாற்றும் கதாபாத்திரத்தில் அன்னா பென், நன்றாகவே நடித்திருக்கிறார். யோகி பாபு, தனது அம்மா வடிவுக்கரசி மூலம் மோசடி நபராக மாற்றப்படும் கதாபாத்திரம். மோசமில்லை என்று சொல்லும் அளவில் நடித்திருக்கிறார். சிரிக்கவும் வைக்கிறார். யோகி பாபுவின் அம்மாவாக நடித்திருக்கும் வடிவுக்கரசி. குறிப்பிடும்படி நடித்து ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

மற்றபடி அகிலன், நந்தகோபால், விடிவி கணேஷ், தீப ராமானுஜம், ராதாரவி, அருள்தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ராகு எசக்கி, சதானந்த் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள், பின்னணி இசை குறை சொல்லும் வகையில் இல்லை. ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாத் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. படத்தொகுப்பாளர் அருள் மோசஸ்.ஏ, க்ளைமாக்ஸ் காட்சி நெருங்கும்போது சுவாரசியம் செய்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் ஹரிஸ் துரைராஜ், சாதூர்யமாக செய்யப்படும் மோசடிகளையும், மனிதர்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்படலாம் என்பதையும் நன்றாக காட்சிப்படுத்தி விழிப்புணர்வையும் அலுத்தமாக சொல்லியிருக்கிறார். இதைப்போல் பல படங்கள் வந்திருந்தாலும், கொஞ்சம் ரசிக்கும்படி காட்சியமைக்கப்பட்டிருப்பது ஆறுதலான விஷயம்.

மொத்தத்தில், ‘கான் சிட்டி’ – மோசடி சிட்டி!