‘அரண்மனை 3’ : விமர்சனம்

ஆர்யா,  சுந்தர்.சி  ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால், விவேக், வேல ராமமூர்த்தி, மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், யோகிபாபு, மனோபாலா, நளினி, மைனா உள்ளிட்ட ஒரு நட்சத்திர கூட்டமே நடித்திருக்கும் படம், அரண்மனை.

சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப்படத்தினை அவ்னி சினிமேக்ஸ், பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்திருக்கிறது. வெளியிட்டிருக்கிறது, ரெட் ஜெயன்ட் மூவீஸ்.

சுந்தர்.சி இயக்கத்தில் இதற்குமுன் வெளியான அரண்மனை 1, அரண்மனை 2, ஆகிய இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தாக உருவாகியிருக்கும் ‘அரண்மனை 3’ எப்படியிருக்கிறது?

ஜமீன்தார் சம்பத்ராஜ் தனது அரண்மனையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர்களுடன் சில பேய்களும் வசித்து வருகிறது. ஒரு நாள் அந்தப்பேய் சம்பத்ராஜின் மகளான ராஷி கண்ணாவை கொல்லத்துடிக்கிறது. அவர் தப்பித்தாரா, இல்லையா? என்பது தான் ‘அரண்மனை’ படத்தின் கதை.

ரசிகர்களை கவரும் விதத்தில் சுந்தர்.சி இந்தப்படத்தில் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ‘சார்பட்டா’ ஆர்யாவை சாதுர்யமாக பயன்படுத்தியிருக்கிறார். ராஷி கண்ணா, ஆண்ட்ரியா என இரண்டு நாயகிகளில் ஒருவரை கிளாமருக்காகவும், இன்னொருவரை நடிக்கவும் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையில் குறை வைக்கவில்லை.

சுந்தர்.சிக்கு இந்தப்படத்திலும் பேயைக் கண்டுபிடித்து அழிக்கும் வேலை. அவர் பேய் இருப்பதை உணரும் காட்சிகளில்  மிரட்டல். அவரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும், சி சத்யாவின் இசையும் இணைந்து கொண்டு காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.

விவேக், மனோபாலா மற்றும் யோகி பாபுவின்  கூட்டணி ரசிகர்களை சிரிக்க வைக்கும் வேலையை  செய்திருக்கிறது. இவர்களுடன் நளினி, மைனா ஆகியோரது அடல்ட் காமெடிக் கூட்டணி கூடுதலாக சிரிக்க வைக்கிறார்கள்.

ஜமீன்தார் சம்பத்ராஜ், பூசாரி வேல ராமமூர்த்தி, மந்திரவாதி  மதுசூதன ராவ் மற்றும்  சாக்‌ஷி அகர்வால், வின்செண்ட் அசோகன் ஆகியோரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளனர்.

அக்கறையுடன் கூடிய திரைக்கதையில், கூடுதலாக இன்னும் கொஞ்சம் திகிலிலும், காமெடியிலும் கவனம் செலுத்தியிருந்தால்…  ‘அரண்மனை 3’  எல்லோரையும் அலற வைத்து கிச்சு.. கிச்சு மூட்டியிருக்கும்.