ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பர்த் மார்க்’. இதில், ஷபீர் கல்லாரக்கல், மிர்னா மேனன், தீப்தி ஓரியண்டலு, இந்திரஜித் ,பி ஆர் வரலட்சுமி, பொற்கொடி செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார் . விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இனியன் பாண்டியன் படத்தொகுப்பு செய்துள்ளார்.சேப்பியன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.
டேனியல் – ஜெனிபர் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். டேனியல் தனது காதல் மனைவி ஜெனிபரைக் கேரளாவில் ஒரு மலைப் பகுதியில் உள்ள தன்வந்திரி கிராமத்திற்கு, இயற்கை முறையில் பிரசவம் பார்ப்பதற்காக அழைத்து செல்கிறார். ஜெனிபருக்கு அந்த கிராமம், சந்தேகத்தினையும், பயத்தினையும் வரவழைக்கிறது. சில மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்புகிறாள். ஆனால் அதன் பிறகு சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்கிறது. மீண்டும் குழப்பம் அடைகிறாள்.
ஜெனிபருக்கு நிகழும் அதே மாதிரியான சில நிகழ்வுகள் டேனியலுக்கும் நடக்கிறது. நிறைமாதமாக இருக்கும் ஜெனிபரை அவ்வப்போது விட்டு விட்டு காட்டிற்குள் சென்று விடுகிறான். அந்த கிராமத்தில் இருக்கும் ஒருவருக்கும் டேனியலுக்கும் இடையே பிரச்சனை உருவாகிறது. டேனியலின் இந்த செயல்களை பார்க்கும் ஜெனிபருக்கு பயமும் சந்தேகமும் அதிகமாகிறது.
டேனியலுக்கு, குழந்தை பிறப்பது பிடிக்கவில்லை. என்பதை, ஜெனிபர் உணர்கிறாள். அதோடு, அந்த கருவினை கொல்லவும் முயற்சிக்கிறான். இதனால், அவனிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறாள், ஜெனிபர். இதன்பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘பர்த் மார்க்’ படத்தின் மீதிக் கதை.
ஜெனிபரின் கதாபாத்திரத்தினை, நன்கு உணர்ந்து நடித்துள்ளார் மிர்னா மேனன் ஜெனிபர். நிறைமாத கர்ப்பிணியாக, தனது முக பாவனைகள் மூலமாக கர்ப்பிணிப் பெண்ணாக மன வலி, உடல் வலி, தனது கணவனால் என்ன ஏற்படுமோ? என்ற அச்ச உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதேபோல் டேனியலாக நடித்திருக்கும் ஷபீர், சாதரண மனிதனாகவும், மன நிலை பாதித்த மனிதனாகவும் இருவேறு, குணாதிசியங்களை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.
இவர்களோடு தன்வந்திரி மருத்துவமனையில் வேலசெய்பவர்களாக, அம்முலு கதாபாத்திரத்தில் வரும் தீப்தி ஓரியண்டலு வும் மருத்துவராக ஆஷா கதாபாத்திரத்தில் வரும் பொற்கொடி செந்திலும் பொருத்தமான நடிப்பினை கொடுத்துள்ளனர்.
கணவன், மனைவி இரு கதாபாத்திரங்களின் மன உணர்வுகளை மட்டுமே பிரதான படுத்தி திரைக்கதை அமைத்து இருக்கிறார், இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன். அதோடு திரைக்கதையில் பல முடிச்சுக்களை போட்டு, அவைகள் ஒவ்வொன்றாக அவிழும் போது, ரசிகர்களுக்கு சுவாரசியம் ஏற்படுகிறது. மேலும், இயற்கை முறையிலான பிரசவம் குறித்துப் படிப்படியாக விளக்கப்பட்டிருப்பது சிறப்பு! இது, ரசிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
பர்த் மார்க் படத்தின் பெரும் பலமாக இருக்கிறது ஒளிப்பதிவும், இசையும். ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
மொத்தத்தில், ஒரு சில லாஜிக்கான கேள்விகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், பர்த் மார்க் படத்தினை ரசிக்கலாம்.