கருப்பு – விமர்சனம்!

சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே. பாலாஜி , இந்திரன்ஸ், அனகா மாயா, நட்டி, சுவாசிகா , ஷிவதா, ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், கருப்பு. வில்லனாக நடித்திருக்கும் ஆர். ஜே. பாலாஜி எழுதி இயக்கியிருக்கிறார். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ‘ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்’ சார்பில், எஸ். ஆர். பிரகாஷ் பாபு , எஸ். ஆர். பிரபு தயாரித்துள்ளனர்.

இந்திரன்ஸ், கேரளாவிலிருந்து தன்னுடைய மகள் அனகா மாயாவின் சிகிச்சைக்காக சென்னைக்கு ரயிலில் வருகிறார். ரயில், நிலையத்தை அடைவதற்கு முன்னரே இறங்குகின்றனர். அப்போது வழிப்பறிக் கொள்ளையர்களால் அவர்கள் சிகிச்சை செல்வுக்காக கொண்டுவந்த நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நகைகளின் ஒரு பகுதி மீட்கப்படுகிறது. அந்த நகையை பெறுவதற்கு கோர்ட் நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். என்பதால், போலீஸ், வழக்கறிஞர் ஆர் ஜே பாலாஜியை அனுகுமாறு இந்திரன்ஸிடம் அறிவுறுத்துகின்றனர். அவரும் பாலாஜியை சந்திக்க வழக்கு சென்று கொண்டிருக்கிறதே தவிர முடிந்த பாடில்லை.

இந்திரன்ஸ் பலவாறாக அலைக்கழிக்கப்படுவதுடன், பெரும்பணத்தையும் இழக்கிறார். எல்லாவற்றையும் மீறி, அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே, மகள் உயிர் வாழ முடியும் என்ற சூழ்நிலை. வெறுத்துப்போகும் இந்திரன்ஸ் கோர்ட் வளாகத்தில் உள்ள கருப்பு சிலையை வணங்கி, தனது இன்னலை தீர்க்கும்படி முறையிடுகிறார். கருப்பும் சூர்யாவின் ரூபத்தில் வழக்கறிஞராக இந்திரன்ஸ் குறை தீர்க்க வருகிறது. இதன் காரணமாக பாலாஜிக்கும் சூர்யாவுக்கும் மோதல் உருவாகிறது. தன்னிடம் மோதுவது கடவுள் என தெரிந்து கொள்ளும் பாலாஜி, கடவுளின் பலத்தை பிரயோகிக்காமால் மனிதனாக மட்டுமே தன்னிடம் போட்டியிட வேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொள்கிறார். அதன் பிறகு யார் வெற்றிபெற்றது? என்பது தான், கருப்பு படத்தின் மீதிக் கதை.

கதை ஆரம்பிக்கும் விதமும், அடுத்தடுத்த காட்சிகளும் ஆர். ஜே. பாலாஜியை கதாநாயகனாக முன்னிறுத்துகிறது. அடம் ஆரம்பித்த அரை மணி நேரத்திற்குப் பிறகே சூர்யா வருகிறார். கருப்பு எனும் வலிமையான கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி திரைக்கதை அமைக்கப்படவில்லை. நேர்த்தியற்ற திரைக்கதையும், சுவாரசியமற்ற காட்சிகளும் படத்தை ரசிக்க முடியாமல் செய்துவிடுகிறது. துடியான தெய்வமாக போற்றப்படும் கருப்பு வை பல இடங்களில் நக்கல் செய்திருக்கிறார், இயக்குநர் பாலாஜி. அவர், ராகவா லாரன்ஸ் நடித்த சில படங்களை பார்த்தாவது காப்பியடித்திருக்கலாம். பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தை கேலிக்குரியதாக ஆக்கியிருக்கிறார். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட சூர்யாவுக்கு எழுதப்பட்ட காட்சிகளில் போதிய அழுத்தம் இல்லை. இருந்தாலும், அவருக்காக மட்டும் இந்தப்படத்தை பார்க்கலாம்.

ஆர்.ஜே.பாலாஜி, படம் முழுவதும் வருகிறார். அவருக்காக திரைக்கதையில் சமரசம். வழக்கமாக அவரது படங்களில் இடம் பெறும், அஞ்சான் படத்துக்கு 5 டிக்கெட். வசனங்கள் போல இந்தப்படத்தில், ‘மூக்குத்தி அம்மனுக்கு 3 டிக்கெட்’ வசனங்களும் இடம் பெறுகிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் திரைக்கதைக்கு தேவையற்ற கூட்டம். பாடல் காட்சி, வசனக்காட்சி என படம் முழுவதும் கூட்டம்.

நடிப்பினை பொறுத்தவரை, சூர்யா தனது வசீகரத்தாலும், தேர்ந்த நடிப்பினாலும் ரசிகர்களை கவர்கிறார். படத்தின் மொத்த மைனஸையும், பிளஸ் ஆக்குகிறார்.

வழக்கறிஞராக நடித்திருக்கும் திரிஷா, நடிப்பதற்கு பெரிதாக காட்சிகள் இல்லை. சில காட்சிகளிலும் வந்து போவதோடு, பாடல் காட்சியில் ஆட்டமும் போடுகிறார்.
நீதிபதியாக நடித்திருக்கும் நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, ஷிவதா போன்றோரும் இயக்குநரின் விருப்பப்படி நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு. கண்களை உறுத்தும் சிவப்புக்கலரை குறைவாக பயன்படுத்தியிருக்கலாம். மற்றபடி ஓகே! காட்சிகளில் இடம்பெறும் கிராபிக்ஸும் உறுத்தலாக இருக்கிறது. இசை, சாய் அபயங்கர். பெரிதாக ஈர்க்கவில்லை.

எழுதி இயக்கியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, நீதித்துறையில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், அதை நேர்த்தியாகவும், சுவாரசியமாகவும் சொல்லமுடியாமல், திரைக்கதையை சொதப்பியிருக்கிறார். அவர், இயக்குவதை விட,  தன்னுடைய நடிப்பதில் அக்கறை காட்டியிருக்கிறார்.

கருப்பு – சூர்யா!