‘டீமன்’ விமர்சனம்!

சச்சின், அபர்ணதி, கும்கி அஸ்வின், சுருதி பெரியசாமி, கே பி ஒய் பிரபாகரன், ரவீனா தாஹா, நவ்யா சுஜி, தரணி, அபிஷேக் ஆகியோரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், டீமன். இயக்குனர் வசந்த பாலனின், உதவி இயக்குனர், ரமேஷ் பழனிவேல் எழுதி இயக்கியிருக்கிறார். விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஆர். சோமசுந்தரம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

சச்சின், சினிமா இயக்குனராகி விடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவர் தங்குவதற்காகவும், கதை தொடர்பான விவாதங்களை நடத்துவதற்காகவும் ஒரு ஃப்ளாட் எடுத்து தங்குகிறார். ஒரு சில நாட்கள் எந்த இடையூறும் இல்லாமல், கதை விவாதத்தில் ஈடுபடுகிறார்.

சச்சின் இரவினில் தனியாக இருக்கும் போது, அமானுஷ்யமான முறையில் அவர் கொல்லப்படுவது போல் கனவு காண்கிறார். முதலில் அதை சாதரணமாக எடுத்து கொள்கிறார். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அசாதாரணமான சூழல் உருவாகிறது. இதனால், மனநல மருத்துவரிடம் செல்கிறார். அதன் பிறகு சில நாட்களில் காணாமல் போகிறார். அவரை, அவரது நண்பர்கள் தேடி வருகின்றனர். அவரை சுற்றி நடந்த அமானுஷ்யமான நிகழ்வுகளுக்கான காரணம் என்ன? அவர் கிடைத்தாரா, இல்லையா? என்பதே டீமன்.

அறிமுக நடிகர் சச்சின், தோற்றத்திலும், நடிப்பிலும் சிறப்பாக இருக்கிறார். காதல், திகில் நண்பர்களுடன் அரட்டை என பலவித உணர்வுகளை நன்கு வெளிப்படுத்துகிறார். படம் முழுவதும் அவரைச் சுற்றியே கதை நிகழ்கிறது. அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் அபர்ணதிக்கு பெரிதாக நடிப்பதற்கு காட்சிகள் இல்லை. கிடைத்த காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அபர்ணதி கதைக்கு எந்த வகையிலும் உதவவில்லை. அதேபோல்,  சச்சினின் நண்பர்களாக நடித்திருப்பவர்களால் கதையில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஆர்.எஸ். ஆனந்த குமாரின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. அனைத்து காட்சிகளின் கோணங்கள் அழகாகவும் பயமுறுத்தவும் செய்கிறது. ரோனி ரஃபேலின் பின்னணி இசை பரவாயில்லை! இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

வழக்கமான பேய்ப் படங்களில் வரும் காட்சிகள் இல்லை என்றாலும், அதிகமாக பயம் ஏற்படவில்லை. திகில் காட்சிகள் இல்லை.

பேய் படங்கள் என்றால், பயம் இருக்க வேண்டும். டீமன் படத்தில் அது மிஸ்ஸிங்!