‘குட் பேட் அக்லி’ – விமர்சனம்!

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் சார்பில், நவீன் எர்நேனி தயாரித்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ‘குட் பேட் அக்லி’.  இதில், அஜித் குமார், த்ரிஷா, பிரபு, சுனில், அர்ஜுன் தாஸ், ஜாக்கி ஷெராஃப், பிரசன்னா, சிம்ரன், டினு ஆனந்த், கார்த்திகேயன், சாயாஜி ஷிண்டே, உஷா உதூப், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைத்திருக்கிறார், ஜி வி பிரகாஷ்குமார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பினை செய்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே வெளிவந்திருக்கும் இப்படம், எப்படி இருக்கிறது?

‘ரெட் டிராகன்’ என்று அழைக்கப்படும் அஜித் குமார், இந்தியாவில் வசித்துவரும் மிகப்பெரிய டான். இவரது மனைவி த்ரிஷா. இவர்களுக்கு ஒரு மகன். மகன் பிறந்த அன்று, த்ரிஷாவின் வற்புறுத்தலால், குற்றங்களை ஒப்புக்கொண்டு சிறைக்குச் செல்கிறார், அஜித்குமார். அதோடு, மகனுக்கு தன்னுடைய குற்றச்செயல்கள் எதுவும் தெரியாதபடி இருந்து வருகிறார். த்ரிஷா தனது மகனுடன், தந்தை பிரபு வசிக்கும் ஸ்பெயினில் செட்டிலாகிறார்.

சுமார் 18 வருடங்கள் சென்ற நிலையில், அஜித்குமார் – த்ரிஷா ஆகியோரின் மகன் கார்த்திகேயன், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸால் ஸ்பெயினில் கைது செய்யப்படுகிறார். அஜித்குமாருக்கு இது திட்டமிட்ட சம்பவம், என தெரிய வருகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது? என்பது தான் ‘குட் பேட் அக்லி’.

அஜித்குமாரின் ரசிகர்களுக்காக, அவரது ரசிகர் மன்றம் ஒரு படம் எடுத்தால், எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது. இந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம். ஒவ்வொரு காட்சியும், அஜித்குமார் ரசிகர்களை குஷிபடுத்தும் விதமாக, திட்டமிடப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் அஜித்தின் நடிப்பில் வெளியாகி, ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பல படங்களின் ரெஃபெரன்ஸ், படம் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

‘ஏ.கே’  – ‘ரெட் டிராகன்’ என அஜித் குமார், தன்னை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக மாஸ் காட்டி நடித்திருக்கிறார். த்ரிஷா – சிம்ரன் இவர்களுடனான காதல் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். அவரது நடை, உடை, பாவனை என அனைத்தும் மாஸ்..!

அழகான தோற்றத்துடன் அஜித்தின் மனைவியாக நடித்திருக்ககிறார், திரிஷா. தனது கதாபாத்திரத்திற்கேற்ப நடித்திருக்கிறார். பெரிதாக பெர்ஃபாம் பண்ணக்கூடிய காட்சிகள் இல்லாவிட்டாலும்,  கிடைத்த காட்சிகளை சிறப்பாக பயண்படுத்தியிருக்கிறார்.

அர்ஜுன் தாஸ். அஜித்தின் வில்லனாக நடித்திருக்கும் இவர், ஜானி மற்றும் ஜாமி என்ற கதாபாத்திரங்களில் மிரட்டியிருக்கிறார். இவருக்கான இன்ட்ரோ சீன் மாஸ்! அற்புதமான கமர்ஷியல் கதாபாத்திரங்கள். அதை பக்குவமாக பயண்படுத்தி, ரசிகர்களை எளிதில் தன் வசமக்கி விடுகிறார். “ஒத்த ரூபாயும் தாரேன்…” மற்றும் “தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா…’ ஆகிய பாடல்களுக்கு அவர் போடும் ஸ்டைலிஷ் குத்தாட்டம் பக்கா மாஸ்!

மற்றபடி கார்த்திகேயன், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், பிரபு, சிம்ரன், சைன் டாம் ஜாக்கோ, ஜாக்கி ஷெராப் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருக்கிறார். ஸ்டைலிஷாக வலம் வரும் ஜாக்கி ஷெராப் சிறப்பு கவனம் பெறுகிறார். இவரை, இன்னும் கொஞ்சம் பயண்படுத்தி இருக்கலாமோ? என என்ன வைக்கிறது. அவரது தோற்றம்.

ஒளிப்பதிவு அபிநந்தன் ராமானுஜம். இவரது ஒளிப்பதிவு படத்தின் பெரும் பலமாக இருக்கிறது. மொத்தப் படத்தையும் கலர்ஃபுல்லான காட்சிகளால், பிரமாண்டப் படுத்தியிருக்கிறார்.

சுப்ரீம் சுந்தர் வடிவமைத்த சண்டைக்காட்சிள், மசாலா, கமர்ஷியல் ரசிகர்களுக்கு விருந்து!

மசாலா படங்களுக்கே உரித்தான விதத்தில் இசையமைத்திருக்கிறார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். பழைய பாடல்களை ரீமேக் பண்ணிய விதம், ரசிக்க வைக்கிறது.

ஜி.எம்.சேகரின் ஆர்ட் டைரக்‌ஷன் படத்தை பிரமாண்டப் படுத்தியிருக்கிறது.

மொத்தத்தில், லாஜிக்குகளை ஓரம்கட்டிவிட்டு, அஜித்தை வைத்துக்கொண்டு ஒரு பெரிய மேஜிக் ஷோவை நடத்தியிருக்கிறார், எழுதி இயக்கியிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ – அஜித் ஸ்பெஷல்!