நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக வெளிவந்த இத்திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, பாக்ஸ் ஆபீஸில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் ஏகோபித்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ‘ஹாய்’ படக்குழுவினர் அண்மையில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குநர் விஷ்ணு எடவன்,
“என் முதல் திரைப்படம் என்பதால், இந்த மேடையில் இயக்குநராக நிற்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சிவன், நயன்தாரா, எஸ். எஸ். லலித்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரும் தங்களது கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர். இந்த வெற்றி எனக்கு மட்டும் கிடைத்ததல்ல; என்னை நம்பிய ஒட்டுமொத்த குழுவிற்கும் கிடைத்த வெற்றி” என்றார்.
மேலும், இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் தனது பள்ளிப் பருவ நண்பர் என்று குறிப்பிட்ட விஷ்ணு, ‘நான் இயக்குநராவேன், நீ இசையமைப்பாளராவாய்’ என்று பள்ளி நாட்களிலேயே பேசிய கனவு இன்று நனவாகியுள்ளது உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியைத் தருகிறது என்றார். ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் ஆகியோர் படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
விழாவில் பேசிய நடிகர் கவின்,
“மாதத்தின் கடைசியில் வெளியான ‘ஹாய்’ படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. புதிய மாதம் தொடங்கியுள்ள நிலையில், குடும்பச் செலவுகளுக்குப் போக இந்த வார இறுதியில் உங்களது நேரத்தையும் பணத்தையும் ‘ஹாய்’ படத்திற்காகச் செலவிட்டால், நிச்சயம் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திரும்புவீர்கள். மக்கள் கவலைகளை மறந்து, சிரித்து மகிழ்ந்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தை உருவாக்கினோம்” என்றார்.
இயக்குநர் விஷ்ணுவின் திரையுலகப் பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டும் இணைந்தே நகர்ந்ததை நினைவுகூர்ந்த கவின், விஷ்ணு கதை சொன்ன போதே ராதிகா மேடம், பிரபு சார், சுகாசினி மேடம், பாக்யராஜ் சார் போன்ற சீனியர் நடிகர்களைத் தாண்டி வேறு யாரையும் கற்பனை செய்ய முடியவில்லை என்றும், அவர்கள் இணைந்தது தான் கதைக்கு பலம் என்றும் கூறினார். தொடர்ந்து, இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி, அக்ஷய் குமார், அம்ருதா, காவ்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. வினோத் சி. ஜே., கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.