முகேன் ராவ் , பவ்யா ட்ரிகா, வடிவுக்கரசி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, ராதாரவி, நிழல்கள் ரவி, வினோதினி, ரித்விக் ஆகியோரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், ஜின். இப்படத்தினை, டி .ஆர் . பாலா இயக்கித் தயாரித்துள்ளார். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார் .
முகேன் ராவ், மலேசியாவிலுள்ள ஒரு விடுதியில் பாடகராக இருந்து வருகிறார். சொந்த நாடு திரும்பும் போது, மிகவும் தொன்மையான பொருளான ‘ஜின்’ அடங்கி இருக்கும் ஒரு பெட்டியை வாங்கிக்கொண்டு வருகிறார். அந்த பெட்டியை தொட்டமுதலே அவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. தொடர்ந்து அவருக்கு நல்ல சம்பவங்கள் நடந்து வருகிறது. ஆனால் அவர்களுடைய வீட்டிலுள்ளவர்களுக்கு கெட்ட சம்பவங்கள் நடக்கிறது. இதில், முகேன் ராவின் மனைவி பவ்யா ட்ரிகா கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறார். இது குறித்து முகேன் ஆராயும்போது பல திகிலான சம்பவங்கள் நடக்கிறது. அது என்ன என்பதை, சிறுவர்கள் ரசிக்கும் வண்ணம் சொல்லியிருக்கிறார், இயக்குநர் டி .ஆர் . பாலா.
முகேன் ராவ் – பவ்யா ட்ரிகா ஆகிய இருவரும் காதலர்களாகவும், கணவன் மனைவியாகவும், நடித்து ரசிக்க வைக்கிறார்கள். இருவரும் பாடல் காட்சிகளில் அழகாக இருக்கிறார்கள். முகேன் ராவ், காதல், நகைச்சுவை, அடிதடி காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். நல்ல இயக்குநர் இவரை பயன்படுத்தினால், முன்னணி கதநாயகனாக இருப்பார்.
பவ்யா ட்ரிகா, பாடல் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். வழக்கமான கதாநாயகிகளின் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ராதாரவி தனது அனுபவமான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார்.
மற்றபடி, இமான் அண்ணாச்சி, பாலசரவணன், வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி, சிறுவன் ரித்விக் ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவில், கலர்ஃபுல்ல்லான காட்சிகள் கவனம் ஈர்க்கிறது.
விவேக், மெர்வின் ஆகியோரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே!.
ஜின்னை உருவகப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் பெரிதாக இல்லை! அதுவே படத்தின் ப்லமாகவும் இருக்கிறது.
போதிய பயிற்சியின்றி இயக்கப்பட்ட ‘ஜின்’ திரைப்படம் சிறுவர்களை கவர்ந்தாலும் கவரலாம்!