கிரசன்ட் சினி கிரியேஷன் சார்பில், கே.எம். சஃபி தயாரித்து, மகா கந்தன் எழுதி, இயக்கி அறிமுகமாகும் படம், ராஜபுத்திரன். இதில், இளைய திலகம் பிரபு, வெற்றி, கோமல் குமார்,கிருஷ்ண பிரியா, இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், ஆர்.வி.உதயகுமார்,தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு ஆலிவர் டெனி, இசை நெளஃபல் ராஜா,
‘ராஜபுத்திரன்’, வறட்சிக்கு பெயர்போன ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியில், 90 களில் நடக்கும் கதை. மனைவியை இழந்த (பிரபு) செல்லையா, தனது மகன் ( வெற்றி) பட்டா மீது அளவு கடந்த பாசம் வைத்து வளர்த்து வருகிறார். நில, புலன் வசதிகளோடு இருந்த செல்லையா விவசாயம் பொய்த்துப் போனதால், அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாய் மூலம் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதனால், பட்டா, குடும்பத் தேவைகளுக்காகவும், கடன்களுக்காகவும் உண்டியல் (ஹவலா) வேலைக்கு செல்கிறார். அப்போது வழக்கமாக பணத்தை கொண்டு செல்லும் வழியில், தொலைத்து விடுகிறார். இதனால், ஹவாலா கும்பல் அவரை கடத்துகிறது. தனது மகன் பட்டாவை, செல்லையா வீட்டு பத்திரத்தை அடகுவைத்து மீட்கிறார். சில நாட்கள் கழித்து தன்னிடம் இருந்த பணத்தை ஹவாலா கும்பலே பறித்திருப்பது தெரிய வருகிறது. அதன் பிறகு பட்டா எடுக்கும் முடிவு, அவரது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது. அதிலிருந்து பட்டா தப்பித்தாரா, இல்லையா? என்பது தான், ‘ராஜபுத்திரன்’.
‘செல்லையா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபு, தன்னுடைய அனுபவமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனம் நிறைகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு, தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார், ‘உம்மா தர்றேன் அம்மா ஆகுறியா’ படல் மூலம். அஸ்மிதாவும் இவரும் போடும் குத்தாட்டம் ரசிக்க வைக்கிறது. அதேபோல் மகன் மீதான பாசம் காட்டும் போதும் ரசிக்க வைக்கிறார்.
‘பட்டா’ என்ற கதாபாத்திரத்தில், தோற்றம், உடல் மொழி, வசனம் என, வெற்றி அப்படியே கிராமத்து இளைஞராக மாறிப்போயிருக்கிறார். இவருக்கும் கதாநாயகி கிருஷ்ண பிரியாவுக்கும் இடையேயான காதல் காட்சிகள் நல்ல ரசனை. அதோடு, கிருஷ்ண பிரியா இளைஞர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.
மற்றபடி, மன்சூர் அலிகான், கன்னட நடிகர் கோமல் குமார், இமான் அண்ணாச்சி, தங்கதுரை, லிவிங்ஸ்டன், ஆர்வி உதயகுமார் ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்துள்ளனர்.
நௌஃபல் ராஜா இசையில், வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசை ஓகே.
ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவு கிராமத்தை ரசிக்கும்படி காட்டியிருக்கிறது.
அறிமுக இயக்குநர் மகா கந்தன், தந்தை மகன் பாசத்தை ரசிக்கும் விதமாக கொடுத்திருக்கிறார். சில இடங்களில், நாடகத்தனமான காட்சிகளையும், மிகை நடிப்பினையும் தவிர்த்திருக்கலாம்.