‘கன்னி’- விமர்சனம்!

காலகாலமாக மூதாதையர்கள் வசித்த மலைக் கிராமத்தில், அவர்களை பின்பற்றி  செங்கா என்ற மூதாட்டி, தெய்வீகத் தன்மையுடைய ஓலைப் பெட்டியின் உதவியோடு, மூலிகைகளை பயன்படுத்தி  தீராத நோய்களையெல்லாம் தீர்த்து வைக்கிறார்.

இந்நிலையில், அந்த மலை கிராமத்திற்கு வரும் ஒரு பெரும் பணக்காரர், திடீரென மூர்ச்சையற்று விழுகிறார். அவருடன் வந்தவர்கள் அவரை மூதாட்டி செங்காவிடம் அழைத்துச் செல்கின்றனர். சில நாட்களில், மூலிகை சிகிச்சைப் பெற்ற பிறகு, அவருக்கு இருந்த தீராத நோய் காணாமல் போகிறது. இதனால் சந்தோஷமாக ஊர் திரும்புகிறார்.

மூலிகை சிகிச்சைப் பெற்ற அந்த பெரும் பணக்காரரின் உடலை சோதிக்கும், பல உலக நாடுகளை சேர்ந்த மருத்துவர்கள், அதிசிக்கின்றனர். இதனால், அந்த ஓலைபெட்டியை, மூதாட்டி செங்காவிடமிருந்து அபகரிக்க முயற்சி செய்கின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது என்பதே, கன்னி படத்தின் கதை.

மாதம்மா வேல்முருகன் செங்காவாகவும், அவருடைய மகன் வேடனாக மணிமாறன் ராமசாமி, மகள் செம்பியாக அஷ்வினி சந்திரசேகர், மருமகள் நீலிமாவாக தாரா க்ரிஷ், மச்சழகனாக ராம் பரதன், மாயம்மாவாக சரிகா செல்வராஜ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களில், செம்பியாக நடித்த அஷ்வினி சந்திரசேகரைச் சுற்றியே முழுக்கதையும் உருவாக்கப்பட்டுள்ளது. அவரும் தன்னுடைய கதாபாத்திரத்தினை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார். சண்டைகாட்சிகளில், அதிக ரிஸ்க் எடுத்தும் நடித்துள்ளார். செங்காவாக நடித்த மாதம்மா வேல்முருகனும், குறிப்பிடும்படி நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அந்த ஊரிலேயே உள்ள சிலரும் நடித்துள்ளனர். சிலர் நடிப்பது ஓவராக்டிங்காக தெரிகிறது. அதிலும் குறிப்பாக வில்லனாக நடித்தவர் ஓவர் ஆக்டிங்.

படம் ஆரம்பித்து, இடைவேளை வரை கதை நகரவேயில்லை! இடைவேளைக்கு பிறகே, என்ன நடக்கிறது? என்பது தெரிய வருகிறது. பாரம்பரியமான மூலிகைகளின் புகழை சொல்ல முற்பட்ட இயக்குநர் மாயோன் சிவ தொரப்பாடி, மூலிகைகளின் பெயரை சொல்லி விளக்கமளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். போற போக்கில் சில மூலிகைகளை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

திரைக்கதையில், பல குழப்பமான காட்சிகள் இருக்கிறது. எதையும் தெளிவாக சொல்லவில்லை. ‘கன்னி’ படத்தின் தலைப்புக்கான பொருளும் விளங்கவில்லை. படம் பார்ப்பவர்களே யூகித்து கொள்ளட்டும் என சில காட்சிகளை விட்டிருக்கிறார்கள். கதைக்கு தேவையற்ற காட்சிகளும் இருக்கிறது. குறிப்பாக படத்தின் வில்லன் கோஷ்டி எதற்காக, இன்ஸ்பெக்டரை கொல்ல வேண்டும்? அதனால், படத்திற்கு ஒரு பிரயோஜனம் இல்லை. அதேபோல், அந்த கிராமத்தில் நடக்கும் பல அமானுஷ்யமான விஷயங்களையும் தெளிவாக சொல்லவில்லை! மூலிகை புகழைப் பேசும் படத்தில்,  ஊரைச்சுற்றி வரும் சித்த பிரம்மை பிடித்த பெண்ணிற்கு, சிகிச்சைக்கான மூலிகை இல்லையா!? இப்படி பல கேள்விகள்.

ராஜ்குமார் பெரியசாமியின் ஒளிப்பதிவில், காடுகள் பிரம்மாண்டமாகவும், அழகாகவும் இருக்கிறது. அடிக்கடி வரும் ஏரியல் ஷாட்ஸ் போர்!

செபாஸ்டியன் சதீஷின் பின்னணி இசை காட்சிகளுக்கு பலமாக இருக்கிறது.

காடுகளின் பின்னணியில் மூலிகைகளின் பெருமையை சொல்ல முற்பட்ட படக்குழுவினரை பாராட்டலாம்.

கன்னி – மர்மங்கள் நிறைந்த மூலிகை காடு!