ஷாருக்கான் – சித்தார்த் ஆனந்த் கூட்டணியின் ‘கிங்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Shah Rukh Khan and Daughter Suhana Khan Starrer King Movie Scheduled For Grand Global Theatrical Release On December 24

பாலிவுட் திரையுலகில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த ‘பதான்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள புதிய ஆக்‌ஷன் த்ரில்லர் காவியம் ‘கிங்’. ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் கௌரி கான், சித்தார்த் ஆனந்த் மற்றும் மம்தா ஆனந்த் ஆகியோர் இணைந்து மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கும் இத்திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் மூலம் ஷாருக்கானின் மகளான சுஹானா கான் முதன்முறையாக வெள்ளித்திரையில் ஒரு முழுநீளத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாவது ஒட்டுமொத்த சர்வதேசத் திரையுலக வணிகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, அனில் கபூர், ராணி முகர்ஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட முன்னணி இந்திய நட்சத்திரப் பட்டாளங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பிரபல நடிகை கரீனா கபூர் இத்திரைப்படத்தில் ஒரு மிக முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் (Cameo) நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்குச் சச்சித் பாலோஸ் ஒளிப்பதிவு செய்ய, முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் பாலிவுட்டின் பிரபல இசை இரட்டையர்களான சச்சின் – ஜிகர் ஆகியோர் முதன்முறையாக இணைந்து இசையமைத்துள்ளனர். இவர்களின் அசாத்திய இசைக் கூட்டணி படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான மிரட்டலான புதிய போஸ்டர், ஷாருக்கானின் முற்றிலும் மாறுபட்ட தோற்றம், ரசிகர்களின் ஆர்வத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.