‘எல்2: எம்புரான்’ – விமர்சனம்!

‘எல்2: எம்புரான்’ படத்தின் முதல் பாகமான ‘லூசிஃபர்’ படத்தில், முதலமைச்சர் பி.கே.ஆர் (பி.கே.ராமதாஸ்) மறைவுக்குப் பிறகு குடும்பம் மற்றும் அடுத்தக்கட்ட அரசியல் தலைவர்களால் ஏற்படும் அமளி, துமளியால், பி.கே.ஆரின் மருமகன் விவேக் ஓபராய் கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். சர்வதேச போதை பொருட் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதால், அவரை எதிர்க்கிறார் மோகன்லால். விவேக் ஓபராயை வீழ்த்த முதலமைச்சரின் மகன் டொவினோ தாமஸை முதலமைச்சர் வேட்பாளர் ஆக்குகிறார். அவரும் முதலமைச்சர் ஆகிறார். இதன் பிறகு நாட்டை விட்டு வெளியேறுகிறார், மோகன் லால். டொவினோ தாமஸ் மத அரசியல் செய்யும் கும்பலுடன் கை கோர்க்க, மாநில மக்கள் துயருக்கு ஆளாகின்றனர். டொவினோ தாமசை எதிர்த்து அவரது அக்காள் மஞ்சு வாரியர் களமிறங்க அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. மோகன் லால் மீண்டும் களத்திற்கு வருகிறார். அவரையும் அவரது சகாக்களையும் தீர்த்துக்கட்ட, சர்வதேச போதைப்பொருள் கடத்தும்  மாஃபியா கும்பல் முடிவெடுக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘லூசிஃபர்’ இரண்டாம் பாகமான,  ‘எல்2 : எம்புரான்’

‘லூசிஃபர்’ படத்தில் மாநில அரசியல், குடும்ப சண்டை, கட்சிக்குள் பூசல் இவைகளை சொன்ன இயக்குநர் பிரித்விராஜ், ‘எல்2 : எம்புரான்’ படத்தில் தேசிய அரசியல் அதாவது, நடப்பு அரசியலை விலாவாரியாக, நேரடியாகவே சொல்லியிருக்கிறார். அந்த கெத்திற்காக அவரை எத்தனை முறை பாராட்டினாலும் பாராட்டலாம்.

ஒரு அரசியல்வாதி தன்னை காப்பாற்றி கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்வான், என்பதை, குஜராத் கலவர பின்னணியில், மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். தங்களது சுய லாபத்திற்காக நாட்டின் செல்வங்களை எப்படி சூறையாடுகிறார்கள் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் பிரித்விராஜ்.

முதலில் மெதுவாக நகரும் திரைக்கதை பின்னர் வேகமெடுக்கிறது. கதாபாத்திரங்களின் அறிமுக காட்சிகள் நீளமக இருந்தாலும், அது சோர்வைத்தரவில்லை. காட்சிகள் சர்வதேச தரத்துடன் படமாக்கப்பட்டிருக்கிறது.

குரேஸி ஆப்ராம் – ஸ்டீபன் நெடும்பள்ளியாக நடித்திருக்கும் மோகன் லால் அதே மாஸுடன் காட்சித்தருகிறார். நடிப்பதற்கு பெரிதான சவால்கள் இல்லாத காட்சிகள். ஆனால் ஸ்டைலிஷாக வலம் வந்து, ரசிகர்களின் மனம் கவருகிறார். இருந்தாலும் ‘லூசிஃபர்’ படத்தில் இருந்த பெப் இதில் இல்லை!

பிரித்விராஜ் சுகுமார், சிறுவயதில் நடந்த கொடூரமான, கசப்பான சம்பவத்திற்காக பழி தீர்க்கக்காத்திருக்கும் சையத் மசூத், கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறை சொல்ல முடியாத நடிப்பு.

மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், அபிமன்யு சிங், இந்திரஜித் சுகுமாரன், கிஷோர், சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ்வின் ஒளிப்பதிவில், படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் சர்வதேச தரத்துடன் இருக்கிறது. ஈராக்கில் நடைபெறுவதாக காட்டப்படும் அந்தக்காட்சி சூப்பர். ஒரு ஹாலிவுட் படத்தினை பார்ப்பதை போன்ற உணர்வினை ஏற்படுத்தி விடுகிறது.

இசையமைப்பாளர், தீபக் தேவின் பின்னணி இசை, சிறப்பாக அமைந்திருக்கிறது. அது படத்தின் பெரும் பலமாகவும் இருக்கிறது.

ஸான காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்தாலும், சில இடங்களில் அதிக்கப்படியான சத்தத்துடன் வழகமான மசாலா படங்களை நினைவூட்டும் வகையிலும் பயணித்துள்ளது.

மூன்று மணி படமாக இருந்தாலும் காட்சிகளில் தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார், படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன்.

படத்தில், பல இடங்களில், சகித்துக் கொள்ளக்கூடிய குறைகள் இருக்கின்றன.

இயக்குநர் பிரித்விராஜ் , தற்போதைய மாநில, தேசிய அரசியலை, மத பிரச்சனைகள் எப்படி வழி நடத்துகின்றன என்பதை, நேரடியாகவும், மறைமுகமாகவும் காட்சிப்படுத்தியிருப்பது இயக்குநராக அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

மொத்தத்தில், ‘எல்2: எம்புரான்’ மலையாள சினிமாக்களுக்கு புதிய வழிகாட்டியாக இருக்கிறது!