அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்களின் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் இசையமைத்து கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘மீசைய முறுக்கு 2’. சமூகத்தில் நிலவும் பாரம்பரிய இசை ஆதிக்கத்திற்கு மத்தியில், அடித்தட்டு மக்களின் பூர்வீக கலை வடிவத்திற்குரிய சுய அடையாளத்தை மீட்டெடுக்கப் போராடும் ஒரு எளிய கலைஞனின் வாழ்வியல் பயணமே இத்திரைப்படத்தின் மையக்கதை. இப்படத்தில் ஆதியுடன் நாசர், கருணாஸ், பாபா பாஸ்கர், யோகி பாபு, கெட்டிகா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சென்னையின் பூர்வீக இசை வடிவமான கானா பாடலை, வெறும் உள்ளூர் கொண்டாட்டமாக மட்டும் சுருக்கிவிடாமல், உலகளாவிய பெரிய மேடைகளில் அங்கீகரிக்கப்படும் ஒரு கலையாக மாற்ற வேண்டும் என்று ஒரு மூத்த கானா இசைக் கலைஞர் தீவிரமாகப் போராடுகிறார். ஆனால், உயர்குடி இசை மரபினரின் ஆதிக்கத்தினால் அவர் கடுமையான புறக்கணிப்புகளையும் சமூக அவமானங்களையும் சந்திக்க நேரிடுகிறது. இந்த லட்சியக் கனவை அவரது அடுத்த தலைமுறையினர் கையில் எடுத்தாலும், குடும்பத்தில் ஏற்படும் பேரிழப்புகள் அவர்களின் வேகத்தைத் தடுத்து நிறுத்துகின்றன. இறுதியாக, மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஒரு இளம் சுயாதீன இசைக்கலைஞன், தங்களின் பூர்வீக இசையைத் திரையுலகின் மூலம் உலக அரங்கிற்குக் கொண்டு செல்லத் துணிகிறான். இந்தத் தொடர் லட்சியப் போராட்டம் வென்றதா, இல்லையா? என்பதே படத்தின் திரைக்கதை.
சென்னை விளிம்பு நிலை மக்களின் கலை வடிவத்தை ஒரு பிரதான வணிகப் படைப்பாக முன்மொழிந்திருக்கும் இயக்குநரின் உன்னதமான நோக்கம் பாராட்டக்கூடியது. நாயகனாக நடித்திருக்கும் ஆதி, மூன்று வெவ்வேறு காலகட்டத்து இசைக்கலைஞர்களின் தவிப்புகளையும் லட்சியங்களையும் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு உறுதுணையாக வரும் கருணாஸ் மற்றும் பாபா பாஸ்கர் தங்களின் நடிப்புத் திறனால் உணர்ச்சிகரமான காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறார்கள். படத்தில் இடம்பெற்றுள்ள கானா பாடல்களை மிகவும் வண்ணமயமாகவும் கலகலப்பாகவும் படம்பிடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம்’

இருப்பினும், ஒரு திரைப்படமாக இது பார்வையாளர்களிடம் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது. வலுவான காட்சிகள் இல்லாததால், படத்தின் முதல் பாதி எந்தவொரு சுவாரசியமும் இன்றி வெறும் பாடல்களோடு மட்டுமே கடந்து செல்கிறது. படத்தில் வைக்கப்பட்டுள்ள நகைச்சுவைக் காட்சிகளும் மிகக் குறுகிய நேரத்திலேயே முடிந்துவிடுவதால் பெரிய அளவில் எடுபடவில்லை. விறுவிறுப்பான திருப்பங்களை எதிர்பார்க்கும் இரண்டாம் பாதியிலும், ஏற்கனவே பல படங்களில் பார்த்த பழக்கமான வழக்கமான கமர்ஷியல் காட்சிகளே மீண்டும் இடம் பெற்று ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கின்றன. குறிப்பாக, கானா இசையின் அசல் வீரியத்தையும் அதன் உச்சத்தையும் காட்டியிருக்க வேண்டிய படத்தின் மிக முக்கியமான உச்சகட்டப் பாடல் (Climax Song), எந்தவித எமோஷனல் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் ஒரு சாதாரண திரைப்படப் பாடலாக மட்டுமே கடந்து போவது படத்திற்கு பலவீனமாக மாறுகிறது.
தங்களின் பாரம்பரிய இசையைப் பெருமைப்படுத்துவதற்காக, மற்றொரு இசை வடிவத்தை தேவையின்றித் தாழ்த்திக் கேலி செய்திருப்பது அநாவசியமான ஒரு அணுகுமுறையாகும். நாயகிகளாக வரும் சைத்ரா ஜே. ஆச்சார் மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோருக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாத நிலையில், கெட்டிகா சர்மா தனது கவர்ச்சியான தோற்றத்தால் இளைஞர்களைக் கவர்கிறார். ஒரு பூர்வீக கலையை உலகிற்கு அடையாளம் காட்டுவதற்கும், அதனை வெறும் வணிகப் பொருளாக மாற்றுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் திரைக்கதையில் நேர்த்தியாகக் கையாளாததால் படம் தடுமாறுகிறது. திரைக்கதை தொய்வுகள் இருந்தாலும், மண்ணின் இசைக்கான அங்கீகாரத்தை நோக்கி உரக்க முழங்கும் இந்த ‘மீசைய முறுக்கு 2’ வரவேற்கத்தக்க ஒரு முயற்சி!