‘டோரதி’ (விமர்சனம்)மாற்றுப் பாலினத்தவர் ஆதரவும், நேர்த்தியற்ற திரைக்கதையும்!

Karthik Subbaraj's Gritty Transgender Drama Suffers from Weak Screenplay

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில், ஜோதி தேஷ் பாண்டே, குணீத் மங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘டோரதி’ (Dorothy) திரைப்படம், முன்னரே திட்டமிட்டு உலகளாவிய மேற்கத்திய அங்கீகாரங்களை பெற குறிவைத்து எடுக்கப்பட்ட ஒரு பிரத்யேக படைப்பாகத் தோன்றுகிறது.

சமுதாயத்தில் மாற்றுப் பாலினத்தவர்களின் (Transgender) உரிமைகளை அங்கீகரித்து, அவர்களுக்கு ஆதரவாகச் சினிமா வழியே ஒரு வலுவான குரலை எழுப்ப முயன்றுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.  இத்திரைப்படத்தில் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, கீர்த்தி சுரேஷ் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ராமச்சந்திரன் துரைராஜ், கஜராஜ், ஜீவா சுப்பிரமணியன், ராம்ஸ் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவும், இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும் இப்படத்தின் தொழில்நுட்பக் கூறுகளாக அமைந்துள்ளன.

இப்படத்தின் கதைக்களம் மதுரையின் பின்னணியில் வன்முறை மற்றும் நட்பின் எல்லைகளைப் பேசுகிறது. பள்ளிப் பருவம் தொட்டே இணை பிரியாத நண்பர்களாக ஒரே ஊரில் வளர்ந்து வரும் சுப்பு (சனந்த்) மற்றும் கார்த்திக் (ரிஷிகாந்த்) ஆகிய இருவரும் வாலிப வயதை எட்டுகின்றனர். எப்போதும் மது அருந்துவது, சண்டைகளில் ஈடுபடுவது என இவர்களது அன்றாட வாழ்க்கை நகர்கிறது. இதில் கார்த்திக் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.

இத்தகைய சூழலில், ஒரு நாள் எதிர்பாராத திருப்பமாகச் சுப்புவின் தந்தையும் அவரது சகோதரர்களும் இணைந்து, சுப்புவைக் கொலை செய்யுமாறு கார்த்திக்கிடம் ஒரு அதிர்ச்சிகரமான  மிரட்டல் கோரிக்கையை வைக்கின்றனர். பெற்ற மகனையே தந்தை கொல்லச் சொல்வதற்கான பின்னணி என்ன, தனது அரும்பெரும் பால்ய நண்பனை கார்த்திக் கொலை செய்தாரா, இல்லையா? என்பதைச் சுற்றியே படத்தின் மீதித் திரைக்கதை நகர்கிறது.

மதுரையின் வாழ்வியலை மையமாகக் கொண்டு படம் முழுவதும் வரம்புகள் மீறிய வன்முறைக் காட்சிகள் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளன. சுப்புவாக வரும் சனந்த் கதையின் மிக முக்கியப் பிரதான வேடத்தைத் தாங்கி நின்றுள்ளார். மற்றொரு நாயகனான ரிஷிகாந்த் தனக்குக் கிடைத்த அத்தனை காட்சிகளையும் மிகச் சரியாகப் பயன்படுத்தித் தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார். இருப்பினும், படத்தின் பல காட்சிகளில் நிலவும் நம்பகத்தன்மையற்ற சூழல் பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. குறிப்பாக, அடுத்தடுத்து வரும் காட்சிகளில் சனந்திற்குத் வட மொழி தெரிந்தவர் போலவும், மற்றொரு புறம் மொழி தெரியாதவர் போலவும் முரணாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

கௌரவத் தோற்றத்தில் வரும் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போவதோடு, கதையின் பிரதான திரைக்கதைக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை. மேலும், அவரது கதாபாத்திரத்திற்கு இறுதியில் என்ன ஆனது என்பதில் நிலவும் தெளிவற்ற தன்மையும், ராமச்சந்திரன் துரைராஜ், கஜராஜ் உள்ளிட்ட இதர துணை நடிகர்களின் பாத்திரங்கள் படத்தில் எந்தவொரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாததும் பலவீனமாக அமைந்துள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் நேர்த்தியற்ற திரைக்கதை அமைப்பும், கதாபாத்திர வடிவமைப்பும் இப்படத்தின் மிக முக்கியப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. பல காட்சிகள் கதையின் ஓட்டத்திற்குத் தேவையின்றி மிகவும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, சிறுவர்கள் ஆபாசப் படம் பார்க்கும் காட்சிகள் எதற்காக வைக்கப்பட்டன, அவை படத்தின் பிரதான திரைக்கதை நகர்வுக்கு எந்த வகையில் உதவின என்பது இயக்குநருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக உள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மாற்றுப் பாலினத்தவர்களின் ஆதரவிற்கான ஒரு கருத்தை கையில் எடுத்திருந்தாலும், காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லாததாலும், திரைக்கதையில் இயக்குநர் பல இடங்களில் தடுமாறியுள்ளதாலும் இந்த ‘டோரதி’ திரைப்படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை.