மிரள் – விமர்சனம்!

‘ஆக்சிஸ் பிலிம் பேக்டரி’  சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ள படம் மிரள். அறிமுக இயக்குனர் M.சக்திவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் பரத், வாணி போஜன் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ் குமார், சிறுவன் அங்கித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எப்படி இருக்கிறது? மிரள்?

பரத்தின் மனைவி வாணிபோஜன், பரத் கொலை செய்யப்படுவதை போல் ஒரு கனவு காண்கிறார். அதோடு ஒரு அமானுஷ்யமான உருவம் அவர்களை பின் தொடர்வதை போலவும் உணர்கிறார். இதற்கு பரிகாரமாக வாணிபோஜன் அம்மா மீராகிருஷ்ணன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கிறார். அதன்படி ஊருக்கு சென்றுவிட்டு  இரவு நேரத்தில் திரும்பும் வழியில் காட்டுப்பகுதியின் நடுவே பரத், வாணிபோஜன், அங்கித் உள்ளிட்டோர் மர்ம உருவத்திடம் சிக்கி போராடுகின்றனர். அவர்கள் தப்பித்தனரா? இல்லையா? என்பது தான் ‘மிரள்’ படத்தின் மிரட்டும் திரைக்கதை, க்ளைமாக்ஸ்!

பரத் இரவினில் காட்டுக்குள் மனைவியையும், மகனையும் காப்பாற்ற போராடும் காட்சியில் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவர் திகிலடையும் இடங்களில் எல்லாம் படம் பார்ப்பவர்களும் திகிலடைகிறார்கள்.

வாணிபோஜன் நடிப்பதற்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். தனது மகனாக நடித்திருக்கும் அங்கித்துடன் காருக்குள் மாட்டிக்கொண்டு கதறும் இடத்தில் பார்ப்பவர்களை பதற வைக்கிறார்.

வாணி போஜனின் பெற்றோர்களாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன் ஆகியோர் கதாபாத்திரத்திற்கேற்ற பொருத்தமான தேர்வு.

திரைக்கதையுடன் சேர்ந்து கொண்டு இசையமைப்பாளர் பிரசாத்தும், ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலாவும் மிரட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவும், இசையும் படத்தின் திக்.. திக்.. காட்சிகளை  மேலும் மேம்படுத்துகின்றன.

டேன்ஜர் மணியின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

லாஜிக் மீறல்கள் மற்றும் சில காட்சிகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் ‘மிரள்’  மிரட்டுகிறது.

சஸ்பென்ஸ், த்ரில்லெர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு ‘மிரள்’  நிச்சயம் பிடிக்கும்!